வேளாண்மை, தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட்! ராமதாஸ் வரவேற்பு

வேளாண்மை, தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
வேளாண்மை, தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட்! ராமதாஸ் வரவேற்பு

வேளாண்மை, தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், தமிழக சட்டப்பேரவையில் மாநில நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த 2020-21 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பாசனத் திட்டங்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

வேளாண்மை தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் என்பதை உணர்ந்து  கொண்டிருக்கும் தமிழக அரசு, 8 மாவட்டங்களில் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் அமைக்கப்படும்; தென்காசியில் எலுமிச்சை, தூத்துக்குடியில் மிளகாய் மையங்கள் அமைக்கப்படும்; உழவர்களின்  ஐயங்களை தீர்ப்பதற்காக உழவர்- அலுவலர் தொடர்புத் திட்டம்; உழவர் பாதுகாப்புதிட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை  அறிவித்திருக்கிறது. உழவர்களுக்கு  ரூ.11,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் உழவர்களுக்கு தாராளமாக கடன் கிடைக்கும்.

நீர்ப்பாசனத் திட்டங்களுக்காகவும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக கிடப்பில் கிடந்த காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தில் முதல்கட்டமாக காவிரி - வெள்ளாறு இடையே இணைப்புக் கால்வாய் அமைப்பதற்கான நிலங்களை கையகப்படுத்த ரூ.700 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதும், அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பதும், காவிரி - சரபங்கா நீரேற்றுப் பாசனத் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் வரவேற்கத் தக்கவை ஆகும். 906 குளங்கள், 183 அணைக்கட்டுகளை சீரமைக்கவும், 37 செயற்கை செறிவூட்டல் கிணறுகள் அமைக்கவும் ரூ.649 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும், நீர்ப்பாசனத்துறைக்கு ரூ.6991 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் பாராட்டப்பட வேண்டியவை ஆகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com