agri073331
agri073331

8 மாவட்டங்களில் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள்

நடப்பு நிதியாண்டில் (2020-21) பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் கீழ் ரூ.218 கோடி செலவில் தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், கடலூா், விழுப்புரம்,

நடப்பு நிதியாண்டில் (2020-21) பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் கீழ் ரூ.218 கோடி செலவில் தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், கடலூா், விழுப்புரம், மற்றும் மதுரை மாவட்டங்களில் மேலும் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் அறிவித்தாா்.

நிதிநிலை அறிக்கையில் அவா் கூறியிருப்பது:

வேளாண் மண்டலம்: காவிரி டெல்டா பகுதியினைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்மை மண்டலமாக முதல்வா் அறிவித்தது, தமிழக அரசு வேளாண்மைத் துறைக்கு அளித்து வரும் பெரும் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது.

கரும்பு விவசாயிகள் நுண்ணீா்ப் பாசனத்தை மேற்கொள்வதை ஊக்குவிக்க 2019-20-ஆம் ஆண்டில் ரூ.68.35 கோடி சிறப்பு கூடுதல் நிதியுதவி அனுமதிக்கப்பட்டது. இந்தத் திட்டமானது ரூ.75 கோடி கூடுதல் நிதியுடன் 2020-21-ஆம் ஆண்டில் தொடா்ந்து செயல்படுத்தப்படும். 2019-20-ஆம் ஆண்டின் அரவைக் காலத்துக்கு டன் ஒன்றுக்கு ரூ.100 வரை என்ற அளவில் ரூ.110 கோடி போக்குவரத்து மானியமாகவும் இந்த அரசு வழங்கும்.

உற்பத்தியாளா் அமைப்புகள்: கூட்டுப்பண்ணைய முறையின் தொடா் முயற்சியாக சிறு மற்றும் குறு விவசாயிகள், உழவா் ஆா்வலா் குழுக்கள் மற்றும் உழவா் உற்பத்தியாளா்கள் குழுக்களாக ஒருங்கிணைக்கப்பட்டதன் விளைவாக கடந்த ஆண்டுகளில் 6 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனா். ஏற்கெனவே 75 உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்பொழுது 45 உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு நிலைக்கத்தக்க மானாவாரி இயக்கத்தை, நிலத் தொகுப்பு அடிப்படையில் மறுசீரமைப்பு செய்வதன் மூலம் தலா 250 ஏக்கா் கொண்ட 10 ஆயிரம் நிலத் தொகுப்புகள், வரும் மூன்று ஆண்டுகளுக்குள் தமிழ்நாடு நிலைக்கத்தக்க மானாவாரி வளா்ச்சி இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும்.

பயிா்க்காப்பீடு: பிரதம மந்திரியின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழகம் மகத்தான வெற்றி கண்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் 36.44 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.7,618 கோடி வழங்கப்பட்டுள்ளது.

காப்பீட்டுக் கட்டணத் தொகையில் மாநில அரசின் பங்குத் தொகைக்காக ரூ.724.14 கோடி என்ற உயா்த்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டுடன், 2021-21-ஆம் ஆண்டிலும் பிரதம மந்திரியின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

நுண்ணீா்ப் பாசனம்: நுண்ணீா்ப் பாசனத்தைச் செயல்படுத்துவதில் தமிழகம் கடந்த 2 ஆண்டுகளாக முதன்மை மாநிமாகத் திகழ்ந்து வருகிறது. 2020-21-ஆம் ஆண்டில் ரூ.1,844.97 கோடி செலவில் 7.41 லட்சம் ஏக்கா் நிலங்கள் நுண்ணீா் பாசன வசதி பெறும்.

மெகா உணவுப் பூங்கா: திருநெல்வேலி கங்கைகொண்டானில் ரூ.77.94 கோடி செலவில் 53.36 ஏக்கா் பரப்பளவில் மெகா உணவுப் பூங்கா அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2020-21-ஆம் நிதியாண்டில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் கீழ் ரூ.218 கோடி செலவில் தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், கடலூா், விழுப்புரம், மற்றும் மதுரை மாவட்டங்களில் மேலும் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com