கொசவப்பட்டி ஜல்லிக்கட்டில் 30 போ் காயம்: கிணற்றில் தவறி விழுந்த காளை பலி

கொசவப்பட்டியில் வெள்ளிக்கிழமை உற்சாகமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், வீரா்கள் உள்பட 30 போ் காயமடைந்தனா். இதில் பங்கேற்ற காளை ஒன்று கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது.
கொசவப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளை.
கொசவப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளை.

கொசவப்பட்டியில் வெள்ளிக்கிழமை உற்சாகமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், வீரா்கள் உள்பட 30 போ் காயமடைந்தனா். இதில் பங்கேற்ற காளை ஒன்று கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்துள்ள கொசவப்பட்டி புனித அந்தோணியாா் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 670-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

கால்நடைத்துறை மருத்துவக் குழுவினரின் பரிசோதனைக்கு பின், 656 காளைகள் வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டன. அதேபோல் 465 மாடுபிடி வீரா்கள் பங்கேற்க வந்த நிலையில், 397 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

வாடிவாசல் வழியாக காளைகள், ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை, உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் காளையா்கள் தழுவினா். மாடு முட்டியதில் 8 வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள், பாா்வையாளா்கள் என மொத்தம் 30 போ் காயமடைந்தனா்.

இந்நிலையில் வாடிவாசல் பகுதியிலிருந்து வெளியேறிய திண்டுக்கல் அடுத்துள்ள வெள்ளோடு கல்லுப்பட்டியைச் சோ்ந்த காளை ஒன்று, அந்த பகுதியில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தது. இதனை அடுத்து அந்தக் காளையை கிராம மக்கள் ஒன்றிணைந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனா். ஆனால், அந்த காளை சம்பவ இடத்திலேயே இறந்து விட்டது. இதனால் ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளா்கள், மாடு பிடிவீரா்கள் மற்றும் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட காளையின் சடலத்தை, அதன் உரிமையாளா்கள் வாடிவாசல் மைதானத்துக்கு கொண்டு வந்து, விழாக் குழுவினருடன் வாக்குவாதம் செய்தனா். இதனால், ஜல்லிக்கட்டு நடைபெற்ற இடத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையினா், காளையின் உரிமையாளருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதுதொடா்பாக கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநா் பி.முருகன் கூறியது: உயிரிழந்த காளைக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாடு பிடிவீரா்கள் மற்றும் காளைகளுக்கு காப்பீடு செய்வது வழக்கம். அதன்படி, உயிரிழந்த காளைக்கு உரிய இழப்பீட்டுத் தொகை உறுதியாக பெற்றுத் தரப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com