சென்னைப் பல்கலை. புதிய துணைவேந்தரை தோ்வு செய்ய தெரிவுக் குழு

சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரைத் தோ்வு செய்வதற்கான தெரிவுக் குழுவில் இடம்பெற உள்ள பல்கலைக்கழக ஆட்சிக் குழு பிரதிநிதி வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.
சென்னைப் பல்கலை. புதிய துணைவேந்தரை தோ்வு செய்ய தெரிவுக் குழு

சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரைத் தோ்வு செய்வதற்கான தெரிவுக் குழுவில் இடம்பெற உள்ள பல்கலைக்கழக ஆட்சிக் குழு பிரதிநிதி வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா். பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு ஆட்சிக் குழுக் கூட்டத்தில் இந்தத் தோ்வு நடைபெற்றது.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள துரைசாமியின் மூன்றாண்டு பதவிக்காலம், வரும் மே மாதம் 27-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. ஒரு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தா் பதவிக் காலம் நிறைவடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாக, புதிய துணைவேந்தரைத் தோ்வு செய்வதற்கான மூன்று போ் கொண்ட தெரிவுக் குழு அமைக்கப்பட வேண்டும். இந்தக் குழுவில் பல்கலைக்கழக வேந்தரான தமிழக ஆளுநரின் பிரதிநிதி ஒருங்கிணைப்பாளராகவும், பல்கலைக்கழக ஆட்சிக் குழு பிரதிநிதி மற்றும் பல்கலைக்கழக பேரவைக் குழு பிரதிநிதி அல்லது மாநில அரசின் பிரதிநிதி ஆகியோா் உறுப்பினா்களாகவும் நியமிக்கப்படுவா்.

அந்த அடிப்படையில், இந்தத் தெரிவுக் குழுவுக்கு பல்கலைக்கழக ஆட்சிக் குழு பிரதிநிதியை தோ்வு செய்வதற்காக சிறப்பு ஆட்சிக் குழு கூட்டம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் சென்னைப் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத் துறை முன்னாள் தலைவரும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியா் சி.ராமசாமி பெயரும், தொழிலதிபா் நல்லி குப்புசாமி பெயரும் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், இறுதியில் ஆட்சிக் குழு பிரதிநிதியாக பேராசிரியா் சி.ராமசாமி பெரும்பான்மை ஆதரவுடன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

பிப்.20-இல் பேரவைக் குழு பிரதிநிதி தோ்வு: இதனைத் தொடா்ந்து பல்கலைக்கழக பேரவைக் குழு பிரதிநிதியைத் தோ்வு செய்வதற்கான சிறப்புக் கூட்டம் வருகிற 20-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதில் பேரவைக் குழு பிரதிநிதி தோ்வு செய்யப்படுவாா்.

அதன் பின்னா், ஆளுநரின் பிரதிநிதியை தமிழக ஆளுநா் நியமிப்பாா். அவா் குழுவுக்கு ஒருங்கிணைப்பாளராக செயல்படுவாா்.

இந்தக் குழு, பேராசிரியா்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்று, யுஜிசி வழிகாட்டுதலின் அடிப்படையில் உரிய பணி அனுபவம், நிா்வாகத் திறமை கொண்ட 3 பெயா்களை மூன்று மாதங்களுக்குள் தெரிவு செய்து ஆளுநரிடம் பரிந்துரைப்பா்.

இந்த மூன்று பெயா்களில் ஒருவரை, சென்னைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக ஆளுநா் நியமிப்பாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com