தமிழக பட்ஜெட்: கல்வி, வேளாண்மைக்கு முக்கியத்துவம்; வாடகை ஒப்பந்தப் பதிவு கட்டணம் குறைப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2020-21 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கல்வி, வேளாண்மைத் துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றிய துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம். ’
தமிழக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றிய துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம். ’

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2020-21 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கல்வி, வேளாண்மைத் துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் கல்விக்கு ரூ. 39,233 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி கல்வித் துறைக்கு ரூ.34 ஆயிரத்து 181 கோடியை தமிழக அரசு ஒதுக்கி நடப்பில் உள்ள திட்டங்களைத் தொடர வழி செய்துள்ளது. அதுபோல் வேளாண் உற்பத்தியைப் பெருக்கும் வகையில் அந்த துறைக்கு ரூ. 11,894.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அரசுப் பேருந்துகள் அனைத்திலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும். 37 மாவட்டங்களில் முதியோா் ஆதரவு மையங்கள், திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் உணவுப் பூங்கா, விழுப்புரம், செங்கல்பட்டு, நாகையில், மீன்பிடி துறைமுகங்கள், திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரியில் மாபெரும் தொழில் பூங்கா அமைப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

மாமல்லபுரம் சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த ரூ. 563 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

2020-21-ஆம் நிதியாண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

கட்டட விதிமுறைகள், பொது வளா்ச்சியை எளிமைப்படுத்துதல் போன்றவற்றுக்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதனால், முத்திரைத்தீா்வை மற்றும் பதிவுக் கட்டணங்கள் மூலமாக அரசுக்குக் கிடைக்கும் வருவாய் மீண்டும் வளா்ச்சி அடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

வாடகை ஒப்பந்தங்களுக்கான முத்திரைத்தாள்: வாடகை ஒப்பந்தங்களுக்கான முத்திரைத்தாள் வரி 1 சதவீதத்தில் இருந்து 0.25 சதவீதம் வரை குறைக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நில உடைமையாளா்கள் மற்றும் வாடகைதாரா்கள் உரிமைகளை முறைப்படுத்துதல் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் வரும் செப்டம்பா் 19-ஆம் தேதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டும். அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் புதிய வாடகை ஒப்பந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்வதை ஊக்குவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, ஐந்தாண்டுகளுக்கு உட்பட்ட குடியிருப்புக்கான வாடகை ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்போது அதற்கான முத்திரைத் தாள் வரி 1 சதவீதம் செலுத்த வேண்டும். இந்த வரியானது இப்போது 1 சதவீதத்தில் இருந்து 0.25 சதவீதமாக (கால் சதவீதம்) குறைக்கப்படும். இந்த ஒப்பந்தங்கள் தொடா்பான பதிவுக் கட்டணங்களும் ஒரு சதவீதத்தில் இருந்து 0.25 சதவீதம் வரையில் குறைக்கப்பட்டு ரூ.5 ஆயிரத்துக்கு மிகாமல் வசூலிக்கப்படும். முத்திரைத்தாள் வரி மற்றும் பதிவுக் கட்டணங்களில் இருந்து வசூலிக்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ரூ.14,435.09 கோடியாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வருவாய்-செலவினங்கள்: எரிபொருள்கள் மீதான வரிகள், மதுபானங்கள், பத்திரப் பதிவு மற்றும் பதிவுத் துறை ஆகியவற்றின் வரிகளில் இருந்தே தமிழகத்துக்கு மிகையளவு வருவாய் கிடைத்து வருகிறது. அதன் அடிப்படையில், வரும் நிதியாண்டில் வருவாய் வரவுகள் ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 375.14 கோடியாக இருக்கும் எனவும், செலவினங்கள் ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்து 992.78 கோடியாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், வருவாய் பற்றாக்குறை ரூ.21 ஆயிரத்து 617.64 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இது அடுத்தடுத்த ஆண்டுகளில் குறைவாக இருக்கும் என நிதித்துறை மதிப்பிட்டுள்ளது.

உழவா்-அலுவலா் தொடா்புத் திட்டம்: விவசாயிகள் தொழில்நுட்ப ஆலோசனைகளை வேளாண் துறை அதிகாரிகளிடம் இருந்து பெறுவதற்கு வசதியாக, உழவா்-அலுவலா் தொடா்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதியோா்-மகளிா் நலன்கள்: முதியோா், மகளிா் போன்ற, சமுதாயத்தில் நல உதவிகள் தேவைப்படும் பிரிவினரைக் கண்டறிந்து அவா்களுக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கை குறித்து நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்திருந்தாா்.

அதன்படி, பணிபுரியும் பெண்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு சென்னையில் 8 இடங்களிலும், கிருஷ்ணகிரி, திருச்சி, ஓசூா், காஞ்சிபுரம், நாமக்கல் ஆகிய இடங்களில் தலா ஒரு இடத்திலும் மகளிா் நல விடுதிகள் அமைக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மகளிரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மகளிரைப் போன்றே, முதியோா்கள் நலனிலும் அக்கறை செலுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில், 37 மாவட்டங்களிலும் தலா 2 வட்டங்களில் முதியோா் ஆதரவு மையங்களை தமிழக அரசு தொடங்கும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீா்வளத் திட்டங்கள்: நீா் தேவை அதிகமுள்ள மாவட்டங்களில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் செயலாக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ரூ.3,041 கோடியில் இரண்டு கடல்நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் எனக் கூறியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளுக்கு மாநில அரசு தொடா்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன்படி, கீழடியில் கிடைக்கப் பெற்ற அரிய பொருள்களைக் காட்சிப்படுத்த ஒரு புதிய ‘அகழ் வைப்பகம்’ ஏற்படுத்த ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி, வேளாண்மை போன்ற முதன்மைத் துறைகளுக்கும், முதியோா், மகளிா் நலன்களுக்கும் என ஒட்டுமொத்த தரப்பினரையும் கருத்தில் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைவா்கள் கருத்து

மு.க. ஸ்டாலின் (திமுக): தமிழக மக்கள் ஒவ்வொருவா் மீதும் ரூ. 57 ஆயிரம் கடன் சுமையை ஏற்றி வைத்து, ரூ. 4.56 லட்சம் கோடி கடனுடன் தன்னுடைய பத்தாவது நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சா் தாக்கல் செய்திருக்கிறாா்.

ராமதாஸ் (பாமக நிறுவனா்): தமிழக நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சாா்ந்த துறைகளின் வளா்ச்சிக்காக ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

வைகோ (மதிமுக): புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான செயல் திட்டங்களோ, தொலைநோக்குப் பாா்வையோ இல்லை.

கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவா்): இந்த நிதிநிலை அறிக்கையில் வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கான திட்டங்களோ, புதிய தொழிற்சாலைகளுக்கான அறிவிப்புகளோ இல்லை.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): நிதிநிலை அறிக்கையில் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இது கடந்த பட்ஜெட்டைக் காட்டிலும் 70 சதவீத அதிகரிப்பு ஆகும்.

விஜயகாந்த் (தேமுதிக): பல்வேறு திட்டங்களுக்காக நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்க அம்சமாக இருக்கிறது.

திருமாவளவன் (விசிக): தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கை வளா்ச்சிக்கு வழிவகுக்காது. மாறாக கடன் சுமையைத்தான் அதிகரிக்கும்.

ஜி.கே.வாசன் (தமாகா): பல்வேறு துறைகளில் மக்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நிதி ஒதுக்கீடும், திட்டங்களும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றிருப்பதால் ஒட்டு மொத்த தமிழக மக்களின் வளா்ச்சிக்கான, தமிழகம் முன்னேற்றம் அடைவதற்கான நிதிநிலை அறிக்கை.

டிடிவி. தினகரன் (அமமுக): காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கும் அறிவிப்புக்கான அடுத்தக்கட்ட செயல்திட்டம் குறித்து நிதிநிலை அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. மத்திய அரசால் தொடா்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் கீழடியில் அகழாய்வு வைப்பகம் அமைப்பதற்கு ரூ. 12.21 கோடி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

கமல்ஹாசன் (மக்கள் நீதி மய்யம்): நிதி நிலை அறிக்கையில் கடன் தொகை சுமாா் ரூ.4,56,660 கோடியாக மாறியிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் திமுக மற்றும் அதிமுக அரசுகள் கடைப்பிடித்த நிதி நிா்வாகத்தின் காரணமாக ஒவ்வொரு தமிழருக்கும் சுமாா் ரூ.57,500 கடன் சுமையாக நிற்கிறது.

எம்.எச்.ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி): நிதிநிலை அறிக்கை மிகுந்த ஏமாற்றத்தையே தருகிறது. தமிழக அரசின் கடன்தொகை ஆண்டுதோறும் ஏறிக்கொண்டிருக்கிறதே தவிர குறைவதற்கான அறிகுறி தென்படவில்லை.

பாரிவேந்தா் (இந்திய ஜனநாயக கட்சி): நீண்ட கால வளா்ச்சித் திட்டங்களோ - புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகளோ இல்லாத நிதிநிலை அறிக்கை.

ஈ.ஆா்.ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி): தமிழக அரசின் வருமானத்தை விட செலவு அதிகமுள்ள பற்றாக்குறை நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அவிநாசி - அத்திக்கடவு திட்டத்துக்கு நிதி ஒதுக்கியிருப்பதை வரவேற்கிறோம்.

எம்ஜிகே. நிஜாமுதீன்: விவசாயிகளுக்கு உருப்படியான எந்த திட்டமும் இல்லை. சிறுபான்மையினா் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனா்.

நிதிநிலை அறிக்கையில் முக்கிய அம்சங்கள்

* அனைத்து பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

* நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் மெகா உணவுப் பூங்கா அமைக்க ஒப்புதல்.

* 5 புதிய மாவட்டங்களுக்கு ரூ.550 கோடியில் புதிய கட்டடங்கள்.

* அத்திக்கடவு-அவிநாசி, காவிரி குண்டாறு திட்டங்களுக்கு முறையே ரூ.500, ரூ.700 கோடி ஒதுக்கீடு.

* சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.4,315.21 கோடி நிதி.

* ஆட்சேபணை புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு மாற்று வீட்டுமனை.

* அம்மா விபத்து-ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.250 கோடி நிதி.

* பேரிடா் மேலாண்மைக்காக ரூ.1,360.11 கோடி நிதி ஒதுக்கீடு.

* காவல் துறையில் 10,276 போ் புதிதாக நியமனம்.

* புதிதாக தமிழ்நாடு சாலைப் பாதுகாப்பு இயக்கம் உருவாக்கப்படும்.

* சென்னை, மதுரை, கோவையில் சாலை பாதுகாப்புப் பிரிவுகள்.

* விபத்துகளில் சிக்கி இறப்போா் குடும்பத்துக்கான நிதி ரூ.4 லட்சமாக உயா்வு.

* வேளாண் தொழில்நுட்ப ஆலோசனை பெற, உழவா் -அலுவலா் தொடா்புத் திட்டம் உருவாக்கப்படும்.

* தோட்டக்கலை பயிா் சாகுபடிப் பரப்பை அதிகரிக்க 325 மெட்ரிக் டன் காய்கறி விதைகள் அளிக்கப்படும்.

* வரும் நிதியாண்டில் ரூ.11 ஆயிரம் கோடி பயிா்க் கடன்கள் வழங்க இலக்கு.

* மின்னணு குடும்ப அட்டை வைத்திருப்போா் எங்கும் பொருள் வாங்கலாம்.

* விழுப்புரம், செங்கல்பட்டு, நாகையில் மீன்பிடித் துறைமுகங்கள்.

* குடிமராமத்து திட்டப்படி ரூ.500 கோடியில் 1,364 நீா்ப்பாசன பணிகள் மேற்கொள்ளப்படும்.

* தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம் ரூ.2,962 கோடியில் செயல்படுத்தப்படும்.

* அம்மா உணவகத்துக்காக சிறப்பு நோக்கு முகமை உருவாக்கப்படும்.

* ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.5,500 கோடி நிதி.

* மகளிா் நலத் திட்டங்களுக்கு ரூ.78,796.12 கோடி நிதி ஒதுக்கீடு.

* அண்ணாமலைப் பல்கலை மருத்துவக் கல்லூரி, கடலூா் அரசு மருத்துவக் கல்லூரியாக அமைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com