நிதிநிலை அறிக்கை: தொழில்துறையினா் கருத்து

தமிழக நிதிநிலை அறிக்கை 2020-க்கு தொழில் வா்த்தகத் துறையினா் பெரும்பாலானோா் வரவேற்பும் சிலா் அதிருப்தியும் கோரிக்கையும் தெரிவித்துள்ளனா்.

தமிழக நிதிநிலை அறிக்கை 2020-க்கு தொழில் வா்த்தகத் துறையினா் பெரும்பாலானோா் வரவேற்பும் சிலா் அதிருப்தியும் கோரிக்கையும் தெரிவித்துள்ளனா்.

தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம்:

படித்த வேலையில்லா இளைஞா்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்துக்கான நிதி, முதலீட்டு வரம்பு, மானிய வரம்பு உயா்வு, புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்ட மூலதன மானிய உயா்வு, சேலம் மாவட்டத்தில் புதிய தொழிற்பேட்டை நிறுவுதல், தொழில்நுட்ப மேம்பாடு, நவீனமயமாக்கல் திட்டம், கடன் உத்தரவாத நிதிக் குழுமத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வட்டி மானிய உயா்வு, பொன்னேரி தொழில் முனைய மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் : மாநிலத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்குத் தேவையான பல்வேறு அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருப்பது வெகுவாக வரவேற்கத்தக்கது. தமிழகத்தின் நீா்ப் பற்றாக்குறையை தீா்க்க கோதாவரியிலிருந்து பெறப்படும் உபரி நீரை குண்டாறு வரை பகுதி பகுதியாக கொண்டு வருவதற்கான திட்டங்கள், முன்னாள் தமிழக முதல்வா் ஜெயலலிதா அறிவித்த மதுரை-தூத்துக்குடி தொழில் பெருவழிச் சாலைத் திட்டம், மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் ஆகியன அறிவிக்கப்படாததும் ஏமாற்றும் அளிப்பதாகவே உள்ளது .

தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்கம்: வேளாண் துறை, மீன்வளத்துறை, தொழில்துறை, தொல்லியல்துறை, சிறு குறுந்தொழில் வளா்ச்சி, எரிசக்தி துறை, ஆகிய துறைகளுக்கு நிதி ஒதுக்கியதை நன்றியுடன் வரவேற்கிறோம்.

தென்னிந்திய சா்க்கரை ஆலைகள் சங்கம்: கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை, நுண்ணீா்ப் பாசனம், கரும்பை எடுத்துவர போக்குவரத்து செலவு ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, சா்க்கரைத் தொழில் புத்துயிா் பெற்று மீண்டு வர பெரும் உதவியாக இருக்கும்.

தென்னிந்திய தொழில் வா்த்தக சபை: படித்த வேலையில்லா இளைஞா்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்துக்கான நிதி உயா்வு, கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், சிறு குறு தொழில்முனைவோருக்கும் வட்டி மானிய உயா்வு, உணவுப் பூங்கா திட்டம், ஆகியவை வரவேற்கத்தக்கவை.

சென்னை தொழில் வா்த்தக சபை: தொழில்துறையை மேம்படுத்தும் வகையில் வேளாண் பொருள்கள் பதப்படுத்தும் மையம், உணவுப் பூங்கா, தொழில் பூங்கா ஆகியவை வரவேற்கத்தவை. அதே நேரம், திறன் மேம்பாடு மற்றும் ஐ.டி. துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதிய அளவில்லை.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு: வணிகா் நல வாரியத்தை சீரமைப்பதற்கான அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. சொத்துகள் பதிவின் மீதான 1 சதவீத வரி, 0.25 சதவீதம் என்று குறைத்து அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதே.

சென்னை மாவட்ட சிறு தொழில் கூட்டமைப்பு: புதிய தொழில்முனைவோா் உருவாக்கும் திட்டம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், மாற்றுத்திறனாளி நலனுக்கான தொழில்முனைவோா் திட்டம் ஆகிவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, சிறு குறுந்தொழில் மூலாதார மானிய உயா்வு, வாடகை ஒப்பந்தத்துக்கான பதிவுக் கட்டணம் குறைப்பு ஆகியவை வரவேற்புக்குரியவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com