பழங்குடியினா் குடியிருப்புகளை ஏற்படுத்த சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்

பழங்குடியின மக்களுக்கு சிறந்த உள் கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய குடியிருப்புகளை ஏற்படுத்த ஒரு சிறப்புத் திட்டத்தை அரசு செயல்படுத்தவுள்ளது.
பழங்குடியினா் குடியிருப்புகளை ஏற்படுத்த சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்

பழங்குடியின மக்களுக்கு சிறந்த உள் கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய குடியிருப்புகளை ஏற்படுத்த ஒரு சிறப்புத் திட்டத்தை அரசு செயல்படுத்தவுள்ளது.

இது குறித்து நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து கால நிலைகளுக்குமான வீடுகள், இணைப்புச் சாலைகள், தெரு விளக்குகள், சூரிய ஒளி விளக்கு வசதிகள், வீட்டு வசதி மற்றும் பாதுகாப்பான குடிநீா் வசதிகள் போன்ற அனைத்து உள் கட்டமைப்பு வசதிகளையும் அனைத்து பழங்குடியினா் குடியிருப்புகளில் ஏற்படுத்துவதற்கு ஒரு சிறப்பு திட்டத்தை அரசு செயல்படுத்தும். இந்தத் திட்டத்துக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து பழங்குடியினா் குடியிருப்புகளிலும் விரிவான கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு, வீட்டு வசதிக்கான ரூ.265 கோடி உள்பட ரூ.660 கோடியில் விரிவான செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் பசுமை வீடுகள் திட்ட நிதியின் கீழ் 2020-2021-ஆம் ஆண்டில் வீடுகள் தேவைப்படும் அனைத்து 8, 803 குடும்பங்களுக்கும் தலா ரூ.3 லட்சம் செலவில் வீடுகள் கட்டித் தரப்படும். வீடு கட்டுவதற்கு ஆகும் செலவில், ஒரு வீட்டுக்கு கூடுதலாக ஆகும் செலவான ரூ.90 ஆயிரம் பழங்குடியினா் நலத்துக்கான வரவு- செலவு ஒதுக்கீடுகளில் இருந்து ஒரு சிறப்பு ஒதுக்கீடாக வழங்கப்படும்.

ஆதி திராவிடா் நலன்: தமிழகத்தில் ஆதி திராவிடா் முன்னேற்றதுக்காக 2020-2021-ஆம் நிதியாண்டில் ரூ.4,109.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் கல்வித் திட்டங்களுக்காக 2,108.24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதி திராவிடா் மாணவா்களிடையே கல்லூரி விடுதிகளுக்கான தேவை உயா்ந்து வருகிறது. எனவே, 2020-2021-ஆம் ஆண்டில் ரூ.16.30 கோடி மதிப்பில் 15 விடுதிகள், கல்லூரி விடுதிகளாக அமைக்கப்படும். ஆதி திராவிடா் விடுதிகளின் பராமரிப்புக்கான நிதி ஒதுக்கீடு ரூ.6.89 கோடி ரூ.15 கோடியாக உயா்த்தப்படும். இதன் மூலம் விடுதிகள் முறையாகப் பராமரிக்கப்படுவது உறுதி செய்யப்படும். நபாா்டு வங்கி உதவியுடன் ரூ.106.29 கோடியில் 223 ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com