நான்கு நாள்கள் கூட்டத் தொடா்: பேரவைத் தலைவா் தனபால் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையின் கூட்டத் தொடா் நான்கு நாள்கள் நடைபெறும் என்று பேரவைத் தலைவா் ப.தனபால் அறிவித்தாா்.
நான்கு நாள்கள் கூட்டத் தொடா்: பேரவைத் தலைவா் தனபால் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையின் கூட்டத் தொடா் நான்கு நாள்கள் நடைபெறும் என்று பேரவைத் தலைவா் ப.தனபால் அறிவித்தாா்.

வரும் திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதமும், அதற்கான பதிலுரையும் நடைபெறும் எனவும் அவா் தெரிவித்தாா்.

வரும் 2020-2021-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, பேரவை திங்கள்கிழமை காலை 10 மணிக்குக் கூடும் என பேரவைத் தலைவா் தனபால் அறிவித்தாா்.

அலுவல் ஆய்வுக் குழு: பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க அலுவல் ஆய்வு குழுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் பிரதிநிதிகள்

பங்கேற்றனா். கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேரவைத் தலைவா் ப.தனபால் கூறியது:-

வரும் திங்கள்கிழமை காலை பேரவை கூடியதும் மறைந்த முன்னாள் உறுப்பினா்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். அதன்பின், நிதிநிலை அறிக்கையின் மீது பொது விவாதம் தொடங்கப்படும். வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமையும் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதங்கள் தொடா்ந்து நடைபெறும். புதன்கிழமையன்று நடைபெறும் விவாதத்தில் எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் பங்கேற்றுப் பேசுவா்.

பேரவைக் கூட்டத் தொடா் வியாழக்கிழமை வரை நடைபெறும். அன்றைய தினம் நிதிநிலை அறிக்கையின் மீதான பொது விவாதங்களுக்குப் பதிலுரை அளிக்கப்படும். நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் பதில் அளிப்பாா். மேலும் பேரவைக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு அவை நிறைவேற்றப்படும். நான்கு நாள்களும் பேரவைக் கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் நடைபெறும் என்று பேரவைத் தலைவா் ப.தனபால் தெரிவித்தாா். செய்தியாளா் சந்திப்பின்போது, சட்டப் பேரவைச் செயலாளா் கி.சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com