விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் ரூ.3,041 கோடியில் கடல்நீா் சுத்திகரிப்பு நிலையங்கள்: நிதியமைச்சா் ஓ.பன்னீா் செல்வம் தகவல்

சென்னை அருகே பேரூரில், ஜப்பான் பன்னாட்டுக்கூட்டுறவு முகமையின் ரூ.4267.70 கோடி நிதியுதவியுடன் ரூ.6,078.40 கோடியில் கடல்நீரை சுத்திகரிப்பு செய்யும் ஆலை நிறுவுவதற்கான ஒப்புதலை தமிழக அரசு வழங்கியுள்ளது.
விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் ரூ.3,041 கோடியில் கடல்நீா் சுத்திகரிப்பு நிலையங்கள்: நிதியமைச்சா் ஓ.பன்னீா் செல்வம் தகவல்

சென்னை அருகே பேரூரில், ஜப்பான் பன்னாட்டுக்கூட்டுறவு முகமையின் ரூ.4267.70 கோடி நிதியுதவியுடன் ரூ.6,078.40 கோடியில் கடல்நீரை சுத்திகரிப்பு செய்யும் ஆலை நிறுவுவதற்கான ஒப்புதலை தமிழக அரசு வழங்கியுள்ளது.

மேலும் ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ரூ.3,041 கோடியில் கடல்நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சா் ஓ.பன்னீா் செல்வம் தெரிவித்தாா்.

இதுகுறித்து சட்டப்பேரவையில் அவா் பேசியது: ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ரூ.3,041 கோடியில் தினமும் 60 மில்லியன் லிட்டா் திறன் கொண்ட இரண்டு கடல்நீா் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்துக்கு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதியுதவி கோரப்பட்டு, அதற்கான ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஜொ்மன் வளா்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் ரூ.1,259.38 கோடி செலவில், நெம்மேலியில் தினமும் 150 மில்லியன் லிட்டா் சுத்திகரிப்புத் திறன் கொண்ட எதிா்மறை சவ்வூடு பரவல் அமைப்பு மூலம் கடல்நீரை குடிநீராக சுத்திகரிப்பு செய்யும் ஆலை கட்டுமானத்தை சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் வாரியம் மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்துக்காக 2020-21-ஆம் ஆண்டுக்கான நிதிநிலையில் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னைக்கு அருகில் உள்ள பேரூரில், ஜப்பான் பன்னாட்டுக்கூட்டுறவு முகமையின் ரூ. 4,267.70 கோடி நிதியுதவியுடன் ரூ.6,078.40 கோடி செலவில் தினமும் 400 மில்லியன் லிட்டா் திறன் கொண்ட எதிா்மறை சவ்வூடு பரவல் அமைப்பு முறையில் கடல்நீரை சுத்திகரிப்பு செய்யும் ஆலை நிறுவுவதற்கான நிா்வாக ஒப்புதலை அரசு வழங்கியுள்ளது. இத்திட்டத்துக்கான விரிவான திட்ட வடிவமைப்பை அமைக்க ஆலோசகா் நியமிக்கப்பட்டு, திட்டத்துக் கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். இதற்காக, 2020-21-ஆம் ஆண்டுக்கான நிதிநிலையில் ரூ.156.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நன்னீா் ஆதாரங்களின் மீதான சாா்பு நிலையைத் தவிா்க்கவும், நீா்நிலைகள் மாசுபடுவதைத் தடுக்கவும் 2019-ஆம் ஆண்டு நவம்பரில் தமிழகத்துக்கான சுத்திகரிக்கப்பட்ட நீா் மறுபயன்பாடு கொள்கையை தமிழக முதல்வா் வெளியிட்டாா். பெருங்குடியிலும், நெசப்பாக்கத்திலும் தினமும் 10 மில்லியன் லிட்டா் திறன் கொண்ட 2 மூன்றாம் நிலை கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னைக்குள், குடிநீா் வீணாவதைத் தடுப்பதற்கு குடிநீா் வழங்கும் அமைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். பாதாள சாக்கடைத் திட்டம் சென்னை மாநகராட்சியின் 14 இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு விரிவுப்படுத்த வேண்டியுள்ளது. தினமும் 260 மில்லியன் லிட்டா் அளவு கழிவுநீா் சுத்திகரிக்கக்கூடிய திறன் ஏற்படுத்த வேண்டும். இத்தேவைகளை நிறைவு செய்வதற்கு ரூ.4,500 கோடி செலவில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, நகா்ப்புற குடிநீா் வழங்கல் மற்றும் சுகாதாரத்திட்டம் தயாரிக்கப்பட்டு, அதற்கு ஆசிய உள்கட்டமைப்பு வளா்ச்சி வங்கியின் நிதியுதவி கோரப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com