தமிழக நிதிநிலை அறிக்கை எதுவும் நிறைவேற வாய்ப்பில்லை: கே.எஸ்.அழகிரி

தமிழக சட்டப்பேரவையில் வாசிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை எதுவும் நிறைவேறும் வாய்ப்பு இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழக நிதிநிலை அறிக்கை எதுவும் நிறைவேற வாய்ப்பில்லை: கே.எஸ்.அழகிரி


கன்னியாகுமரி: தமிழக சட்டப்பேரவையில் வாசிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை எதுவும் நிறைவேறும் வாய்ப்பு இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் தமிழக காங்கிரஸ் இலக்கிய அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டு நாள் அரசியல் பயிலரங்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்தது. இந்தப் பயிலரங்கத்துக்கு  வந்திருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது:

"எடப்பாடி அரசின் நான்கு ஆண்டுகால ஆட்சி சிறப்பான ஆட்சி என சொல்ல முடியாது. இரவும், பகலும் வந்து செல்வது போன்று நான்கு ஆண்டுகள் சென்றுள்ளது. இந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் வளர்ச்சியை பொறுத்தவரை தோல்விதான். வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. நீட் தேர்வு வேண்டாம் என்று பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினர்கள். ஆனால் அதில் வெற்றிபெற முடியவில்லை. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நீட் தேர்வை ரத்து செய்திருக்க வேண்டும். 

அதுபோன்று சிறப்பு நிதி எதையும் மாநிலத்துக்குப் பெற முடியவில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆறாயிரம் கோடியை சிறப்பு நிதியாக வழங்கினார். அதுபோன்று இவர்களும் நிதி பெற்றிருக்க வேண்டும், ஆனால் பெறவில்லை. சிறப்பு நிதிதான் பெறவில்லை என்றால், மாநில அரசுக்கு சேரவேண்டிய நிதியையே இவர்கள் பெறவில்லை. மத்திய அரசு, மாநில அரசுக்கு தரவேண்டிய பங்குத்தொகை மட்டுமே ரூ. 12,000 கோடி இருக்கிறது. அந்த பணத்தை இதுவரை பெறமுடியவில்லை. 

சுய மரியாதை என்று பார்த்தால் அதுவும் இந்த அரசுக்கு இல்லை. சி.பி.ஐ. சோதனைக்கு மாநில முதல்வரின் அனுமதி வேண்டும். தலைமைச் செயலகத்தில் முதல்வர் அமர்ந்திருக்கும்போதே அருகில் உள்ள தலைமைச் செயலர் அறையில் சி.பி.ஐ சோதனை நடத்துகிறது. மத்திய அரசை கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள். 

நம் திட்டங்கள் எல்லாமே அரைகுறையாக உள்ளது. தமிழகத்தின் நிதிச்சுமை இருபத்தைந்தாயிரம் கோடியாக இருக்கிறது. இவ்வளவு கோடிக்கு பற்றாக்குறை இருக்கும்போது புதிய திட்டங்களை ஏன் அறிவிக்கிறீர்கள். அதற்கு பணம் இல்லாததல் அந்த திட்டங்கள் அறிவிப்போடு சரி, நிறைவேறாது. 

சிறந்த வரவு, செலவுத் திட்டம் என்றால், இவ்வளவு நிதி பற்றாக்குறையை சரிசெய்ய வரியின் மூலம் இவ்வளவு நிதி கொண்டு வருவோம், மத்திய அரசு மூலம் இவ்வளவு கொண்டு வருவோம், அன்னிய மூலதனம் மூலம் கொண்டுவருவோம், அல்லது சொந்த மாநிலத்திலேயே மூலதனத்தை பெருக்குவோம் எனச் சொல்லிதான் அதை சரிசெய்ய வேண்டும். ஆனால் அதுபோன்ற எந்த திட்டமும் மாநில அரசிடம் கிடையாது" என்றார் அவர்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது ஹெச். வசந்தகுமார் எம்.பி., மாநில காங்கிரஸ் நிர்வாகி மயூரா ஜெயக்குமார், மாநில இலக்கிய அணித் தலைவர் நாஞ்சில் ராஜேந்திரன், மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில (ஒ.பி.சி) பிரிவு பொதுச்செயலர் ஸ்ரீநிவாசன், மாவட்ட இலக்கிய அணித் தலைவர் ஜோசப்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com