
தொல்லியல் துறைக்கும், கீழடி அகழ்வைப்பகம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணிகளையும் தமிழக அரசு விரைந்து தொடங்க வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள பல்வேறு முக்கிய அம்சங்களில் தொல்லியல் துறைக்கும், கீழடி அகழ்வைப்பகம் அமைப்பதற்கும் ஒதுக்கும் நிதியானது தமிழினம், தமிழ்மொழி, தமிழ் இலக்கியங்கள் ஆகியவற்றின் பெருமையை, புகழை நிலைநாட்டவும், பண்டையத் தமிழக வரலாற்றுச் சிறப்புகளை உலகளவில் பரப்புவதற்கும் பயன்படும். தமிழக அரசின் இந்த அறிவிப்பு பாராட்டுக்குரியது.
இந்நிலையில், கீழடியில் 6 -ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் வரும் 19 -ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா் தெரிவித்திருப்பது பாராட்டுக்குரியது. இந்தச் சூழலில், கீழடியில் அகழ்வைப்பகம் அமைப்பதற்கு ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்ட நிதியை அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்து, அதற்கான பணிகளையும் விரைந்து முடித்து செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.