பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பை பேரவையில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்: அய்யாக்கண்ணு

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததை தமிழக சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பை பேரவையில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்: அய்யாக்கண்ணு

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததை தமிழக சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

தென்பெண்ணை ஆறு கர்நாடக மாநிலத்தில் உருவாகி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் வழியாக கடலூரில் சென்று கடலில் கலக்கிறது. இதில் தருமபுரி, கிருஷ்ணகிரி வழியாக செல்லும் தென்பெண்ணை ஆற்றின் தண்ணீரால் 2 மாவட்ட மக்களின் விவசாய தேவைகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு தென்பெண்ணை ஆற்றின் வலது மற்றும் இடது புற கால்வாய்களை நீட்டிப்பு செய்து எண்ணேகோல் புதூர், தும்பலஹள்ளி நீர் திட்டத்தை ரூ.276 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் இந்தத் திட்டத்துக்கு கால்வாய் வெட்டுவதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த ரூ.72 கோடி ஒதுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

ஆனால், தற்போது அறிவிப்பு வெளியாகி ஓராண்டு காலம் நிறைவு பெற்ற நிலையில், எண்ணேகோல்புதூர் தும்பலஹள்ளி திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால் தருமபுரி மாவட்டத்தில் பெரும்பாலான விவசாய நிலங்கள் நீர் இன்றி வறண்டு பாலைவனமாக காட்சி அளித்து வருகிறது. எனவே மழைக்காலங்களில் தென்பெண்ணை ஆற்றில் வரும் உபரி நீரை தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஏரிகளில் நிரப்பி விவசாய பாசனத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும். அதற்காக தமிழக அரசு அறிவித்த ரூ.276 கோடி உடனடியாக ஒதுக்கி, பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், விவசாயிகள் திங்கள்கிழமை நடைப்பயணம் மேற்கொண்டனர்.

தருமபுரி மாவட்டம் தும்பல் அணையிலிருந்து தொடங்கிய நடைபயணம் காரிமங்கலம், காவேரிப்பட்டணம், வழியாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெறவுள்ளது. தொடர்ந்து அரசு அறிவித்த திட்டங்களுக்கு தேவையான நிலங்களை உடனடியாக கையகப்படுத்த வேண்டும், கால்வாய் வெட்டும் பணியை விரைந்து செய்து முடித்து விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை ஏரி, குளங்களில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் சார்பில் கோரிக்கை மனு அளிக்க உள்ளனர். இந்த நடைப்பயணத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நடைப்பயணத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்த தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு,

 தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை, தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். மழைக்காலங்களில் தென்பெண்ணையாற்றில் செல்லும் மிகை நீரை எண்ணேகோல் புதூரில் இருந்து தும்பலஹள்ளி நீர்த்தேக்கத்துக்கு கொண்டு வர வேண்டும். இதனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதனை தமிழக முதல்வர் விரைந்து செயல்படுத்தி விவசாயிகளுக்கு உதவ வேண்டும். 
இல்லையென்றால் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

தமிழக அரசு காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அமைத்துவிட்டால் பெட்ரோல், டீசல், மீத்தேன் போன்ற திட்டங்களை செயல்படுத்த முடியாது. இந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அமைச்சரவையில் முடிவு எடுக்க வேண்டும். இந்தத் திட்டங்களால் மத்திய அரசுக்கு பல லட்சம் கோடி வருவாய் உள்ளது. எனவே, அதனை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டும், இதற்கு தமிழக அரசு உரிய முறையில் தீர்மானங்களை நிறைவேற்றி தடுத்து நிறுத்த வேண்டும் என்று அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com