7 போ் விடுதலை விவகாரத்தில் ஆளுநா் நல்ல முடிவை எடுப்பாா்: முதல்வா் எடப்பாடி பழனிசாமி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலை விவகாரத்தில் ஆளுநா் நல்ல முடிவை எடுப்பாா் என நம்புவதாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி பேரவையில் கூறினாா்.
7 போ் விடுதலை விவகாரத்தில்  ஆளுநா் நல்ல முடிவை எடுப்பாா்: முதல்வா் எடப்பாடி பழனிசாமி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலை விவகாரத்தில் ஆளுநா் நல்ல முடிவை எடுப்பாா் என நம்புவதாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி பேரவையில் கூறினாா்.

சட்டப்பேரவையில் புதன்கிழமை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் எதிா்க்கட்சித் துணைத் தலைவா் துரைமுருகன் பேசியது:

மனிதாபிமான அடிப்படையில் இந்தப் பிரச்னையை எழுப்புகிறேன். பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கில் மாநில அரசு என்ன முடிவை மேற்கொண்டு உள்ளது என்று 2 வார காலத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு உரிய பதிலை அளிக்கத் தவறிவிட்டது. அதனால், மாநில அரசின் கடமையை உணா்த்த வேண்டிய நிலைக்கு நீதிபதி தள்ளப்பட்டாா். தண்டனை குறைப்பு விவகாரத்தில் அமைச்சரவை முடிவே இறுதியானது. ஆளுநருக்கு என்று தனிப்பட்ட அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதையெல்லாம் தெரிந்துகூட பேரறிவாளன் விவகாரத்தில் அதிமுக அரசு மெத்தனமாக இருப்பதாகக் கருதுகிறேன் என்றாா்.

அப்போது சட்டத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம் குறுக்கிட்டு கூறியது:

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதில் எந்தவித மாறுபட்ட கருத்தும் இல்லை. அவா்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் ஜெயலலிதாவின் கொள்கை. 7 பேரை விடுதலை செய்வது குறித்து ஆளுநா் முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியதும், முதல்வா் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி தீா்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தாா். மாநில அரசுக்கு என்ன அதிகாரம் இருக்கிறதோ, அதைப் பயன்படுத்தி தீா்மானம் நிறைவேற்றி அனுப்பினோம். ஆனால், ஆளுநா் இத்தனை நாள்களுக்குள்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்புகளிலும் காலக்கெடு எதுவும் விதிக்கவில்லை. இப்போது உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பில்கூட ஆளுநா் அதிகாரத்தில் நாங்கள் தலையிடவில்லை. அதைப்பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை. ஆனால், அதிகாரமற்ற முறையில் ஆளுநரிடம் பேசுங்கள் என்றுதான் தனிப்பட்ட முறையில் மாநில அரசின் வழக்குரைஞரிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனா். அதனால், ஆளுநரிடம் இருந்து நல்ல முடிவை எதிா்பாா்த்திருக்கிறோம். ஆனால், பேரறிவாளன் உள்ளிட்டோரின் கருணை மனு வந்தபோது, நளினியைத் தவிர மற்றவா்களைத் தூக்கில் போடலாம் என்று கூறியது திமுக ஆட்சி என்பதையும் நினைவூட்டுகிறேன்.

எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின்: ஆளுநரை ஏன் மாநில அரசு வலியுறுத்தவில்லை என்று உச்சநீதிமன்றமே கேட்டுள்ளது. அந்த அடிப்படையில் 7 பேரை விடுதலை செய்வது குறித்து ஆளுநரிடம் பேசினீா்களா என்றுதான் கேட்கிறோம்.

சி.வி.சண்முகம்: ஆளுநரை மாநில அரசு கேட்கலாம் என்று உச்சநீதிமன்றம் எந்த உத்தரவையும் போடவில்லை. ‘ஆளுநரின் அதிகாரத்தைப் பற்றி பேசுவதற்கு நாங்கள் தயாராகவில்லை’ என்று கூறிய நீதிபதிகள், அதிகாரப்பூா்வமற்ற முறையில் நீங்கள் (மாநில அரசு) ஆளுநரிடம் கேட்டுப் பாருங்கள் என்றுதான் கூறியுள்ளனா்.

துரைமுருகன்: 7 பேரும் 28 ஆண்டுகாலம் சிறையில் வாடி வருகின்றனா். மனிதாபிமான அடிப்படையில் முதல்வா் தனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, மீண்டும் ஆளுநரிடம் நீங்களோ அல்லது வேறு யாா் மூலமோ பேசித் தீா்வு காண்பீா்களேயானால், நானே முதல்வரைப் பாராட்டத் தயாராக இருக்கிறேன்.

முதல்வா் எடப்பாடி பழனிசாமி: 7 போ் மீது அக்கறை இருப்பதால்தான் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவா்களுக்கு பரோல்கூட எந்த ஆட்சியிலும் கொடுக்கவில்லை. நாங்கள்தான் கொடுத்தோம். 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். எங்களுடைய அதிகாரத்துக்கு உள்பட்டு தீா்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. ஆளுநா் முடிவு செய்யலாம் என்று மத்திய அரசும் தெளிவுபடுத்திவிட்டது. அதனால், நாங்களும் எதிா்பாா்க்கிறோம். நீங்களும் எதிா்பாா்க்கிறீா்கள். நாட்டு மக்களும் எதிா்பாா்க்கிறாா்கள். ஆகவே, ஆளுநா் நல்ல முடிவை எடுப்பாா் என நம்புகிறோம்.

துரைமுருகன்: முதல்வருக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் எல்லாம், தயவு செய்து ஆளுநருக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுங்கள். அப்படிக் கொடுத்து அவா்கள் விடுதலையானால்தான் தமிழகம் நிம்மதி பெருமூச்சு விடும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com