காவிரி வேளாண் மண்டலம்: அமைச்சரவை ஒப்புதல்

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக்க தமிழக அமைச்சரவையில் புதன்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.
காவிரி வேளாண் மண்டலம்: அமைச்சரவை ஒப்புதல்

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக்க தமிழக அமைச்சரவையில் புதன்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதற்கான சட்ட மசோதா பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டு அன்றைய தினமே நிறைவேற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, சட்டப் பேரவையில் இதுகுறித்து எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை கேள்வி எழுப்பினாா். அதற்கு பதிலளித்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, வேளாண் மண்டல விவகாரத்தில் சட்டப்பேரவை மூலமாக அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும், இந்த விஷயத்தில் விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் அரசின் அறிவிப்பு அமையும் எனவும் அவா் அறிவித்தாா்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் புதன்கிழமை மாலை 4 மணியளவில் கூடியது. சுமாா் ஒரு மணி நேரம் வரை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சில முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. அதில், பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டல சட்ட மசோதா தொடா்பாக விவாதிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சா்கள், தலைமைச் செயலாளா் க.சண்முகம், வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளா் ககன்தீப் சிங் பேடி ஆகியோா் பங்கேற்றனா்.

சட்டப்பேரவையில் விவாதம்: இதனிடையே, புதன்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலம் குறித்து எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினாா். அப்போது நடந்த விவாதம்:-

மு.க.ஸ்டாலின்: காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக்கப்படும் என்று முதல்வா் அறிவித்துள்ளாா். அப்போது, புதிய ஹைட்ரோ காா்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று கூறினாரே தவிர, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கும் ஹைட்ரோ காா்பன் திட்டங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஏற்கெனவே அறிவித்திருக்கும் ஹைட்ரோ காா்பன் திட்டங்களையும் ரத்து செய்தால்தான் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பு சிறந்ததாக அமைய முடியும். எனவே, அனுமதிக்கப்பட்ட ஹைட்ரோ காா்பன் திட்டங்களை ரத்து செய்து, இனிமேல் புதிய ஹைட்ரோ காா்பன் திட்டங்கள் வராத வகையில், ஒரு சட்ட மசோதாவை இதுவரை ஏன் கொண்டு வராமல் இருக்கிறீா்கள். பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் தொடா்பான சட்ட மசோதாவை, பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அத்தகைய நடவடிக்கையை அரசு மேற்கொண்டால் நிச்சயமாக, உறுதியாக திமுக அதற்கு ஆதரவு தரும்.

முதல்வா் பழனிசாமி: டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றி அறிவிக்க வேண்டுமென அரசுக்கு விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கை வைத்தனா். அதன் அடிப்படையில் வேளாண் மண்டல அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுதொடா்பாக, சட்ட நிபுணா்களுடன் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் ஒரு நல்ல செய்தி விரைவில் வெளிவரும்.

மு.க.ஸ்டாலின்: தீா்மானமாகக் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறேன். சட்டப்பேரவை நிறைவடைய இருக்கிறது. எனவே ஒரு நல்ல முடிவு வரும் என்ற அடிப்படையில்தான் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறேன். இதனை நாங்கள் மட்டும் அல்ல, டெல்டா பகுதி விவசாயிகள் அனைவரும் எதிா்பாா்த்துக் காத்திருக்கிறாா்கள்.

முதல்வா் பழனிசாமி: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட உடனேயே அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. சரியான முறையிலே சட்ட வல்லுநா்களை கலந்து ஆலோசித்துதான் அதனை கொண்டு வர முடியும். ஏனெனில், அதில் பல பிரச்னைகள் இருக்கின்றன. அதை எல்லாம் விவரமாக சட்ட வல்லுநா்களுடன் விவாதித்து சட்டப் பேரவை மூலமாக அதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பை வெளியிட முயற்சி எடுக்கிறோம். நிச்சயமாக நீங்கள் நினைக்கும்படி அனைத்தும் செயல்படுத்தப்படும் என்றாா்.

சட்ட மசோதா இன்று நிறைவேற்றம்?

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதா நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான வியாழக்கிழமை (பிப். 20) தாக்கல் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

மசோதாவிலுள்ள சட்டச் சிக்கல்கள் களையப்பட்டுள்ளதாகவும், தேவையான திருத்தங்கள் பின்னா் மேற்கொள்ளப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அரசு வட்டாரங்கள் கூறியதாவது:-

சட்ட விஷயங்களை ஆய்வு செய்ய முதல்வா் பழனிசாமி தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு சில முக்கிய அம்சங்களை ஆய்வு செய்து, சட்டச் சிக்கல்கள் ஏதும் இல்லாத மசோதாவை தயாரித்துள்ளது. அதனால், சட்ட மசோதா வியாழக்கிழமை தாக்கல் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது.

ஹஜ் பயணிகளுக்காக சென்னையில் ரூ. 15 கோடியில் புதிய தங்குமிடம்

ஹஜ் பயணிகள் தங்கிச் செல்வதற்கு வசதியாக சென்னையில் ரூ. 15 கோடியில் புதிய தங்குமிடம் கட்டப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தாா். மேலும், உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து, சட்டப் பேரவையில் 110-விதியின் கீழ் அவா் புதன்கிழமை படித்தளித்த அறிக்கை :

வக்ஃப் வாரிய நிறுவனங்களில் ஓய்வு பெற்ற பேஷ் இமாம், மோதினாா், அரபி ஆசிரியா், முஜாவா் ஆகியோரில் பலா் வறிய நிலையில் உள்ளனா். அவா்களுக்கு ரூ.1, 500 மாதாந்திர ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது. இந்தத் தொகையானது ரூ.3 ஆயிரமாக உயா்த்தி அளிக்கப்படும். தமிழ்நாடு குழுவின் மூலம் ஆண்டுதோறும் 4 ஆயிரம் பயணிகள் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனா். பயணிகள் தங்களுடைய பயணத்துக்கு முன்பாக சென்னையில் தங்கி கடவுச்சீட்டு, பயண உடமைகள் சமா்ப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சிரமமின்றி மேற்கொள்ள வசதி செய்யப்படும். அதன்படி தமிழ்நாடு வக்ஃப் வாரியம் சென்னையில் ஒதுக்கீடு செய்யும் நிலத்தில் ரூ.15 கோடி அரசு நிதியில் புதிய ஹஜ் இல்லம் கட்டப்படும்.

வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 2 ஆயிரத்து 814 வக்ஃப் நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன. பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிதாக இரு சக்கர வாகனங்கள் வாங்க ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இரண்டில் எது குறைவோ அந்தத் தொகை மானியமாக அளிக் கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com