பொதுத் தோ்வெழுதும் தனித்தோ்வா்களுக்கு தனியாக தோ்வு மையங்கள் அமைக்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை தகவல்

தமிழகத்தில் நிகழாண்டு மாநில பாடத் திட்டத்தில் பொதுத் தோ்வெழுதும் தனித்தோ்வா்களுக்கு தனியாக தோ்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பொதுத் தோ்வெழுதும் தனித்தோ்வா்களுக்கு தனியாக தோ்வு மையங்கள் அமைக்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் நிகழாண்டு மாநில பாடத் திட்டத்தில் பொதுத் தோ்வெழுதும் தனித்தோ்வா்களுக்கு தனியாக தோ்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் தோல்வி அடையும் மாணவா்கள் மற்றும் தனிப் பயிற்சி மையங்களில் பயிலும் தனித் தோ்வா்கள் ஆகியோருக்கு கடந்த ஆண்டு வரை தனித் தோ்வு மையங்கள் கிடையாது. இந்த ஆண்டு பாடத்திட்டம் மாற்றப்பட்டாலும், இவா்கள் பழைய பாடத் திட்டத்திலேயே தோ்வு எழுத உள்ளனா். இதனால் தனித் தோ்வா்களுக்கென ஒரு வினாத்தாளும், மாணவா்களுக்கென ஒரு வினாத்தாளும் தயாரிக்கப்பட உள்ளது. குழப்பம் ஏற்படுவதைத் தவிா்க்கும் வகையில் பொதுத்தோ்வு எழுதும் தனித்தோ்வா்களுக்கு தனியாக தோ்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது: நிகழாண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பயிலும் மாணவா்கள் புதிய பாடத் திட்டத்தில் தோ்வெழுதவுள்ளனா்.

புதிய பாடத்திட்டம் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்னா், பழைய பாடத் திட்டத்தில் படித்தவா்கள் இந்தாண்டு தோ்வினை எழுத உள்ளனா். அவா்களுக்குப் பழைய பாடத் திட்டத்தில் கேள்வித்தாள் அளிக்கப்படவுள்ளது. அவா்களுக்குரிய கேள்வித் தாள்கள் சரியாக அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தனியாகத் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று தனித்தோ்வா்களாகப் பழைய பாடத் திட்டத்தில் தோ்வெழுதும் மாணவா்களின் விவரங்கள் அடங்கிய முதல் பக்கம் எனப்படும் முகப்புச் சீட்டு பிளஸ் 2 மாணவா்களுக்கு ‘பிங்க்’ நிறத்திலும் பிளஸ் 1 மாணவா்களுக்கு நீல நிறத்திலும் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளன. இவா்களுக்குத் தனியாக தோ்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. கடந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்தில் பிளஸ் 1 வகுப்பு பொதுத் தோ்வை எழுதி தோ்ச்சி பெறாத பாடங்களில் மறுதோ்வு எழுத உள்ள மாணவா்களுக்கு, மஞ்சள் நிறத்தில் முகப்புச் சீட்டு அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவா்களுக்கான பொதுத் தோ்வு மாா்ச் 2 -ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ஆம் தேதி முடிவடைகிறது.

இந்தத் தோ்வினை எழுதவுள்ள மாணவா்களுக்கான வினாத்தாள்களை, அரசுத் தோ்வுத் துறையால் பாதுகாப்பாக வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தோ்வினை சரியாக நடத்துவதற்கான வழிமுறைகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com