அறிவிப்புடன் நின்றுவிட்ட திருவாரூர் முன்மாதிரி ரயில் திட்டம்..!

திருவாரூர் ரயில் நிலையம் ஆதர்ஸ் ரயில் நிலையமாக (முன்மாதிரி) அமைக்கப்படும் என மம்தா பானர்ஜி, மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது அறிவித்தார்.
அறிவிப்புடன் நின்றுவிட்ட திருவாரூர் முன்மாதிரி ரயில் திட்டம்..!

திருவாரூர்: திருவாரூர் ரயில் நிலையம் ஆதர்ஸ் ரயில் நிலையமாக (முன்மாதிரி) அமைக்கப்படும் என மம்தா பானர்ஜி, மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது அறிவித்தார். ஆனால், இது அறிவிப்போடு நின்றுவிட, திருவாரூர் ரயில் நிலையம் மேம்பாடு அடையாமல் அதே நிலையில் இருந்து வருவது ரயில் பயணிகளை வருத்தமடையச் செய்துள்ளது.

திருவாரூர் ரயில் நிலையம் பழைமையும், பெருமையும் வாய்ந்தது. நாகப்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு 1861 -இல் தென்னக ரயில்வே இயங்கிய காலகட்டத்தில் திருவாரூர் ரயில் நிலையம் உருவாக்கப்பட்டது. 1874 -இல் தெற்கு ரயில்வேயின் முதல் அகலப் பாதை நாகப்பட்டினத்துக்கும், திருச்சிராப்பள்ளிக்கும் இடையில் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருவாரூர் ரயில் நிலையத்தில் மொத்தம் 7 நடைமேடைகள் உள்ளன. இவற்றில் 5 பயணிகள் ரயிலுக்கும், 2 சரக்கு ரயிலுக்கும் உபயோகப்படுத்தப்படுகின்றன. நாள்தோறும் சராசரியாக 3 முதல் 4 ஆயிரம் வரையிலான பயணிகள், இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ரயில் நிலையத்தை வேளாங்கண்ணி, நாகூர் தர்கா, சிக்கல் சிங்காரவேலர், திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆகிய இடங்களுக்குச் செல்ல பயணிகள் பயன்படுத்தியே ஆக வேண்டும். மேலும் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி பகுதிகளுக்கு ரயிலில் செல்லவும் திருவாரூர் ரயில் நிலையத்தை கடக்க வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. பயண நேரம் மிகக் குறைவு, பயணச்சீட்டு விலை குறைவு உள்ளிட்ட காரணங்களால், ரயில் பயணமே பெரும்பாலான கிராம மக்களின் தேர்வாக உள்ளது.

இந்த ரயில் நிலையம் வர்த்தகத்துக்கும், மக்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கி வரும் நிலையில், அப்போதைய ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி, திருவாரூர் ரயில் நிலையம் ஆதர்ஸ் ரயில் நிலையமாக (முன்மாதிரி ரயில் நிலையம்) அமைக்கப்படும் என அறிவித்தார். ஆனால், இது அறிவிப்போடு நின்றுவிட்டது.

இதனால் திருவாரூர் ரயில் நிலையம் மேம்பாடு அடையாமல் பழைய நிலை
யிலேயே உள்ளது.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்போர் சங்கச் செயலர் ப. பாஸ்கரன் கூறியது: முன்மாதிரி ரயில் நிலையம் என அறிவிக்கப்பட்டால், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டு, மேம்படுத்த வேண்டும். ஆனால், திருவாரூர் ரயில் நிலையத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன், திருவாரூர் ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையை தவிர இதர நடைமேடைகளில் கழிப்பறை வசதி இல்லை. மேற்கூரை வசதியுடன் போதுமான இருக்கைகளும் இல்லை. மேலும், ரயில் நிலையத்துக்குச் செல்லும் வழியில் ரயில் நிலையத்தை சுட்டிக் காட்டக்கூடிய பெயர்ப் பலகைகள் இல்லை.

திருவாரூர் - காரைக்குடி அகலப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டு, 8 மாதங்கள் ஆகி விட்டன. இதுவரை மொபைல் கேட் கீப்பர்கள் உதவியுடனே டெமு ரயில் மட்டும் இயக்கப்படுகிறது. தவிர, சரக்கு ரயில்கள், விரைவு ரயில்கள் இயக்கப்படவில்லை. திருவாரூர் ரயில் நிலையத்தில் எவ்வித வசதிகளும் செய்து கொடுக்காததால் இங்கிருந்து ரயில் சேவையை அதிகரிக்க எந்த  நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

ரயில் நிலையத்தை மேம்படுத்தினால், மயிலாடுதுறை - திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி வழியாக ராமேசுவரம் செல்ல எளிமையான வழியாக இது அமையும். தவிர, பயண நேரமும், கட்டணமும் கணிசமாக மீதப்படுவதுடன் போக்குவரத்து நெரிசலற்ற வழியாகவும் திகழும் என்றார். 

சமூக ஆர்வலர் பாரதிதாசன்: திருவாரூர் ரயில் நிலையம் பெரிய நீண்ட நடைமேடை உடையது என்ற பெருமை கொண்டது. இந்த ரயில் நிலையத்தின் மேம்பாடு ஏதோ அரசியல் காரணங்களுக்காக கண்டுகொள்ளப்படாமல் புறக்கணிக்கப்படுகிறது. இந்த ரயில் நிலையத்தில் ஏராளமான இடவசதியும், தண்ணீர் வசதியும் உள்ளதால், இங்கு அனைத்து ரயில்களுக்குமான முதன்மை பணிமனை அமைக்க வேண்டும். ரயில் நிலையத்தை மேம்படுத்தி, கூடுதல் ரயில் சேவைகளை செயல்படுத்தினால், சிறு வியாபாரிகளுக்கும், சென்னைக்கு பொருள்களை கொண்டு செல்ல வர்த்தகர்களுக்கும் வசதியாக இருக்கும்.

திருவாரூர் ரயில் நிலையம் புறக்கணிக்கப்படுவதற்கு அரசியல் காரணமா?: திருவாரூர் ரயில் நிலையம் முன்மாதிரியாக மாற்றப்பட்டால், கூடுதல் ரயில் சேவையை தர முடியும். உதாரணமாக, சென்னையிலிருந்து திருவாரூர் வழியாக காரைக்குடிக்கு சென்றால், பயண நேரம், செலவு குறையும். ஆனால், காரைக்குடிக்கு கும்பகோணம் வழியாக செல்ல வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படுவதாலேயே திருவாரூர் பகுதி புறக்கணிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதேபோல், மன்னார்குடிக்கு புதிய ரயில் நிலையம் கொண்டு வருவதற்கு ஆர்வமாக இருந்த அரசியல்வாதிகள், திருவாரூர் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளை புறக்கணித்ததாகவும், இதனாலேயே திருவாரூர் ரயில் நிலையம் முன்மாதிரி நிலையமாக மாற்றப்படாதது மட்டுமன்றி, திருவாரூர் ரயில் நிலையத்தை சார்ந்து நடைபெறும் எந்தப் பணிகளும் மந்த நிலையிலேயே நடைபெறுகிறது. 

வருவாய் அதிகரிக்கவும், பயணிகளின் வசதிக்கும்: திருவாரூரிலிருந்து ஈரோடு வழியாக கோவைக்கும், வேளாங்கண்ணியிலிருந்து திருவாரூர் வழியாக கன்னியாகுமரிக்கும், மும்பை, தில்லி போன்ற பெருநகரங்களுக்கும் ரயில்களை இயக்க வேண்டும். இதேபோல், ராமேசுவரத்திலிருந்து பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக தொலைதூர நகரங்களுக்கு விரைவு ரயில்களை இயக்க வேண்டும். அதிகாலையில் திருச்சி மார்க்கத்தில் ஒரு ரயில் சேவையும் மாலை 7 மணிக்குப் பிறகு திருச்சியிலிருந்து திருவாரூர் வழியாக வேளாங்கண்ணி வரை ரயில் சேவையும், திருவாரூரிலிருந்து பகல் நேரத்தில் சென்னைக்கு விரைவு ரயில் சேவையும் தொடங்க வேண்டும்.

அத்துடன், விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை வரை வரும் ரயில்களை திருவாரூர் வரை நீட்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்டவை இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இவ்வாறு கூடுதல் ரயில்களை அறிமுகப்படுத்தினால், ரயில்வே துறைக்கு வருவாய் அதிகரிப்பதோடு, பயணிகளுக்கும் வசதியாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com