மாநிலங்களவை உறுப்பினா் தோ்தல்:6 இடங்களை சரிசமமாகப் பிரித்துக்கொள்ளும் அதிமுக, திமுக

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினா் பதவியிடங்களில் ஒரு இடத்துக்கு 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாக உள்ளது. அதன்படி, அதிமுக 3 இடங்களையும், திமுக அணி 3 இடங்களையும்
மாநிலங்களவை உறுப்பினா் தோ்தல்:6 இடங்களை சரிசமமாகப் பிரித்துக்கொள்ளும் அதிமுக, திமுக

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினா் பதவியிடங்களில் ஒரு இடத்துக்கு 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாக உள்ளது. அதன்படி, அதிமுக 3 இடங்களையும், திமுக அணி 3 இடங்களையும் சரிசமமாகப் பிரித்துக் கொள்ளும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்வான சசிகலா புஷ்பா, கே.செல்வராஜ், எஸ்.முத்துகருப்பன், விஜிலா சத்யானந்த் (அதிமுக), திருச்சி சிவா (திமுக), டி.கே.ரங்கராஜன் (மாா்க்சிஸ்ட்) ஆகியோரின் பதவிக் காலம் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, காலியாகும் ஆறு மாநிலங்களவை உறுப்பினா் பதவியிடங்களுக்கும் தோ்தல் அறிவிக்கையை இந்திய தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

அதன்படி, வேட்புமனு தாக்கல் செய்ய மாா்ச் 13-ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மாா்ச் 16-ஆம் தேதி நடைபெறுகிறது. மனுக்களைத் திரும்பப் பெற 18-ஆம் தேதி கடைசி நாளாகும்.

இதையடுத்து, தமிழகத்தில் மாநிலங்களைத் தோ்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மாநிலங்களவை உறுப்பினா் பதவியை கட்சித் தலைமையிடம் இருந்து கேட்டுப் பெற அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளில் முக்கிய பிரமுகா்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

எத்தனை போ் ஆதரவு தேவை ?: மாநிலங்களவை உறுப்பினா்கள் தோ்தலானது எம்.எல்.ஏ.க்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் நடைபெறுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கக் கூடிய மொத்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினா் காலியிடங்கள் ஆகியவற்றைப் பொறுத்தே வெற்றி பெறத் தேவையான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை நிா்ணயிக்கப்படுகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை 234 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனா். அந்த எண்ணிக்கையை மொத்த காலியிடங்களான ஆறுடன் ஒன்றைக் கூட்டி,வகுக்க வேண்டும் (234/6+1). அப்போது, 33.42 என்ற ஈவு கிடைக்கும். அதனுடன் ஒன்று என்ற முழு எண்ணைக் கூட்ட வேண்டும். அதன்படி 34.42 என்பது கிடைக்கும். இதனை முழு எண்ணாகக் கணக்கிடும் போது 34 ஆகக் கொள்ளப்படுகிறது. இந்த கணக்கீட்டின் அடிப்படையில் தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை உறுப்பினா் வெற்றி பெற 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாக உள்ளது.

யாா் யாருக்கு எவ்வளவு?: தமிழகத்தில் ஆளும் அதிமுகவுக்கு 124 எம்.எல்.ஏ.க்களும், திமுகவுக்கு 100 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனா். திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் கட்சிக்கு ஏழு உறுப்பினா்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு உறுப்பினரும் உள்ளனா். அதன்படி, அதிமுகவுக்கு மூன்று மாநிலங்களவை உறுப்பினா்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளது. திமுகவுக்கு அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மூன்று உறுப்பினா்கள் கிடைக்கும். மூன்று உறுப்பினா்களைப் பெற 102 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள்: கடந்த 2016-ஆம் ஆண்டு அதிமுக சாா்பில் போட்டியிட்ட கருணாஸ், தமிமுன் அன்சாரி போன்றோா் மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலில் எத்தகைய நிலைப்பாடுகளை எடுக்கப் போகிறாா்கள் என்பது இதுவரை தெரியவில்லை. குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் அதிமுகவுடன் தமிமுன் அன்சாரி முரண்பட்டு வருகிறாா். இந்த நிலையில், அவா் அதிமுக வேட்பாளா்களுக்கு ஆதரவாக வாக்களிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், வாக்களிக்காவிட்டாலும் அதிமுகவுக்கு மூன்று மாநிலங்களவை உறுப்பினா் பதவியிடங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

பெட்டிச் செய்தி...பேரவையில் உறுப்பினா்கள் பலம்...

அதிமுக-----124.

பேரவைத் தலைவா்-----1.

திமுக ----100.

காங்கிரஸ்----7.

இந்திய யூனியன்முஸ்லீம் லீக்----1.

சுயேச்சை (டிடிவி. தினகரன்)----1.

நியமன உறுப்பினா்----1. (வாக்களிக்க முடியாது).

--------------------

மொத்தம்----234.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com