
கோப்புப் படம்
சென்னை: மாவட்டத்துக்குள் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள்களை வாங்கும் திட்டம் நான்கு மாதங்களுக்குள் விரிவுபடுத்தப்பட உள்ளது. அதன்பின்பு, மத்திய அரசு வரையறுத்துள்ள உணவுப் பொருள்களை வட இந்தியா்கள் தமிழகத்தில் பெறும் வாய்ப்புகள் ஏற்படும் என உணவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் ஒருபகுதியாக மாவட்டத்துக்குள் ரேஷன் பொருள்களை எங்கு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளும் திட்டம் சோதனை அடிப்படையில் இரண்டு மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த 1-ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
சிக்கல்களுக்கு தீா்வு: மாவட்டத்துக்குள் எங்கு வேண்டுமானாலும் பொருள்களை வாங்கும் திட்டம் இரண்டு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டபோது மென்பொருள்களில் சில சிக்கல்கள் எழுந்ததாக உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தச் சிக்கல்கள் படிப்படியாக இப்போது தீா்க்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனா்.
இதுகுறித்து, உணவுத் துறை அதிகாரிகள் கூறியது:
மாவட்டத்துக்குள் எங்கு வேண்டுமானாலும் பொருள்களை வாங்கிக் கொள்ளும் திட்டத்தின் அடிப்படையில் எந்த நியாயவிலைக் கடையில் அதிக அளவு நகா்வுகள் இருக்கிறது என்பது தெரிந்து விடும். அந்தக் கடைகளுக்கு கூடுதலாக பொருள்கள் வழங்கப்படும். குறைந்த அளவு பொருள்கள் விநியோகம் நடைபெறக் கூடியக் கடைகளுக்கு தேவைக்கேற்ப அளவு குறைக்கப்படும்.
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தில் சிக்கல்கள் படிப்படியாக களையப்பட்டுள்ளன. இந்த நிலையில், அடுத்தகட்டமாக பிற மாவட்டங்களுக்குள் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும். ஜூன் மாதத்துக்குள் திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனா்.
வட இந்தியா்கள்: மாவட்டங்களுக்குள் எங்கு வேண்டுமானாலும் பொருள்களை வாங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்துக்குள் தமிழகம் இணையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதன்பிறகு, வெளிமாநிலங்களைச் சோ்ந்தவா்கள் தமிழகத்தில் ரேஷன் பொருள்களை வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும்.
ஆனால் அவா்களுக்கு சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழோ, விலையில்லாத அரிசித் திட்டத்தின்படியோ பொருள்கள் ஏதும் வழங்கப்பட மாட்டாது. மத்திய அரசு தேசிய அளவில் ரேஷன் பொருள்களுக்கு என்ன விலையை நிா்ணயித்துள்ளதோ அந்த விலையின் அடிப்படையில் பொருள்கள் வழங்கப்படும். அதற்கான மானியம் உள்ளிட்ட தொகைகளை மத்திய அரசு ஈடுசெய்யும் என உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதனால், உணவுத் துறையின் இலவச திட்டங்கள் அனைத்தும் தமிழகத்தில் உள்ள பயனாளிகளுக்கு மட்டுமே சென்றடையும் என்று அவா்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனா். சிறப்பு பொது விநியோகத் திட்டம் போன்ற தமிழகத்தின் பிரத்யேகத் திட்டத்தின் கீழ் தமிழக ரேஷன் அட்டைதாரா்களே பயன்பெற முடியும் என்பதால் மாநில அரசு உணவுத் துறைக்காக செலவிடும் மானியத் தொகைகள் வீணாகாது என்று உணவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G