திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.பி. சாமி காலமானார்

திருவொற்றியூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி. சாமி உடல்நலக்குறைவால் இன்று (வியாழக்கிழமை) காலமானார்.
திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.பி. சாமி காலமானார்


திருவொற்றியூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி. சாமி உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை (பிப். 27) காலமானார்.

திருவொற்றியூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் கே.பி.பி. சாமி (59). இவர் கடந்த ஓராண்டாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை 6.10 மணியளவில் அவரது உடல்நிலை மோசமாகி திருவொற்றியூர் கே.வி.கே. குப்பத்தில் உள்ள அவரது வீட்டிலேயே மரணமடைந்தார். அங்கு வந்த மருத்துவர்கள் அவர் மரணமடைந்ததை உறுதி செய்தனர்.

கே.பி.பி. சாமி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் மிகவும் நெருக்கமாக இருந்தார். மீனவர் பகுதியில்  திமுகவை வளர்க்க கே.பி.பி. சாமி முக்கியப் பங்காற்றியுள்ளார். இவர் மாநில திமுக மீனவர் அணிச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2006-ஆண்டு திமுக ஆட்சியில் மாநில மீன்வளத் துறை அமைச்சராக இருந்த இவர் 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்தார். இதையடுத்து, 2016-இல் திருவொற்றியூர் தொகுதி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட இவர் வெற்றி பெற்று மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினரானார்.

இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இவரை வீட்டில் வந்து பார்த்து உடல் நலம் விசாரித்து சென்றிருந்தார். இவரது மகள் ஆஸ்திரேலியாவில் இருப்பதால், அவர் வந்த பிறகு அவரது இறுதிச் சடங்குகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் எனத் தெரிகிறது.

கே.பி.பி. சாமிக்கு உமா என்ற மனைவியும், இனியவன், பரசு பிரபாகரன் என இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவரது மனைவியும், மூத்த மகன் இனியவனும் ஏற்கெனவே மரணமடைந்துவிட்டனர்.

அவரது மகள் திருமணமாகி தனது கணவரோடு ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அவர் தந்தையைப் பார்த்துவிட்டு ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.

இவருக்கு கே.பி. சங்கர், கே.பி. சொக்கலிங்கம், கே.பி. இளங்கோ என மூன்று சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் உள்ளனர். இதில் கே.பி. சங்கர் திமுக பகுதி செயலாளராகவும், கே.பி. சொக்கலிங்கம் வட்ட செயலாளராகவும் உள்ளனர். மறைந்த இவரது தந்தை பரசுராமன் திருவொற்றியூரில் கவுன்சிலராகப் பணியாற்றியுள்ளார். இவரது மனைவி உமாசாமியும் கவுன்சிலராக இருந்துள்ளார். இவரது குடும்பத்தினர் திமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com