சிறையில் கடும் நெருக்கடி? புழல் சிறைக்கு மாற்ற நளினி, முருகன் கோரிக்கை

வேலூர் மத்திய சிறையில் கடும் நெருக்கடிகள் அளிக்கப்பட்டு வருவதாக முருகன், நளினி ஆகியோர் குற்றம்சாட்டி வந்த நிலையில், திடீரென அவர்கள் தங்களை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை .....
கோப்புப் படம்
கோப்புப் படம்

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் கடும் நெருக்கடிகள் அளிக்கப்பட்டு வருவதாக முருகன், நளினி ஆகியோர் குற்றம்சாட்டி வந்த நிலையில், திடீரென அவர்கள் தங்களை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக, நளினி தமிழக சிறைத்துறை ஏடிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் சிறை தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். சமீபகாலமாக சிறையில் இவர்களுக்கு பல்வேறு விதமாக நெருக்கடிகள் அளிக்கப் படுவதாகக்கூறி கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும், தங்களை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும், அவர்களது கோரிக்கை மீது சிறை நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், சிறையிலுள்ள முருகன், நளினியை அவர்களது வழக்குரைஞர் புகழேந்தி வியாழக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக சிறைத்துறை ஏடிஜிபிக்கு அனுப்பிட அவரிடம் நளினி கடிதம் அளித்துள்ளார். அதில், உடல்நலக்குறைவுடன் எங்களது பெற்றோர் சென்னையில் வசித்து வருகின்றனர். அவர்கள் எங்களை வந்து சந்திப்பதற்கு வசதியாக என்னையும், எனது கணவர் முருகனையும் சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இக்கடித விவகாரம் குறித்து வழக்குரைஞர் புகழேந்தி மேலும் கூறியது: கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள மைதிலி என்ற கைதியின் அறையில் இருந்து 2 செல்லிடப் பேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, பாகாயம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில் பெண் சிறை வார்டன் ஒருவர்தான் அந்த 2 செல்லிடப்பேசிகளை மைதிலி அறையில் வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

அந்த பெண் சிறை வார்டனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவ்விரு செல்லிடப்பேசி களையும் நளினியின் உபயோகத்துக்காக சிறைக்குள் கொண்டு சென்றதாகவும், தவறி மைதிலி அறையில் வைத்ததாகவும் கூறியதாக தெரிகிறது. இந்த விவகாரம் நளினிக்கு தெரியவந்ததை அடுத்து அவர் கடும் மனஅழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளார். இதனால், கடந்த இரு வாரங்களாகவே சரியாக சாப்பிடாமல் இருந்து வரும் நளினிக்கு புதன்கிழமை ரத்தஅழுத்த பாதிப்பு ஏற்பட்டு திடீரென மயக்கமடைந்துள்ளார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்த பிறகு தற்போது அவரது உடல்நிலை சீரடைந்திருப்பதாக நளினி தெரிவித்தார். இதுபோன்று சிறையில் அளிக்கப் பட்டு வரும் நெருக்கடிகளால் நளினியும், முருகனும் கடும் மனஉளைச்சலில் இருந்து வருகின்றனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com