
வல்லத்தில் வியாழக்கிழமை தனியார் பேருந்தை சிறைப்பிடித்த பொதுமக்கள்.
தஞ்சாவூர் அருகே வல்லத்துக்குள் இரவு நேரத்தில் வராத தனியார் பேருந்தை பொதுமக்கள் வியாழக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புதன்கிழமை இரவு திருச்சி நோக்கிப் புறப்பட்ட தனியார் பேருந்தில் வல்லத்தைச் சேர்ந்த 5 பேர் ஏறினர். ஆனால், வல்லம் நகருக்குள் இந்தப் பேருந்து செல்லாமல், புறவழிச்சாலையில் உள்ள மின் நகரில் நிறுத்தி 5 பேரையும் நடத்துநர் இறக்கிவிட்டார்.
இத்தகவல் அவர்களது உறவினர்களிடையே பரவியது. இந்நிலையில், வியாழக்கிழமை பகலில் வல்லம் நகருக்குள் வந்த தொடர்புடைய தனியார் பேருந்தை பொதுமக்கள் வழிமறித்து சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த வல்லம் போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.