போர்க்குற்ற விசாரணையிலிருந்து இலங்கை விலகல்: ராமதாஸ் கண்டனம்

போர்க்குற்ற விசாரணையிலிருந்து விலகிக் கொள்வதாக இலங்கை அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

போர்க்குற்ற விசாரணையிலிருந்து விலகிக் கொள்வதாக இலங்கை அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், இலங்கைப் போரின் போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்த பன்னாட்டு விசாரணையிலிருந்து விலகிக் கொள்வதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தில் அந்நாடு அறிவித்திருக்கிறது. போர்க்குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கான இலங்கை அரசின் இந்த முயற்சி கண்டிக்கத்தக்கதாகும்.

ஈழப்போர் முடிவடைந்து 11 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், ஈழத்தமிழர்கள் மத்தியில் நிலவும் அச்சத்தைப் போக்க அந்நாட்டு அரசு முடிவெடுக்கவில்லை. இராஜபக்சே, மைத்ரிபால சிறீசேனா ஆகியோர் ஆட்சிகளில் தான் இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் அதிகமடைந்தன; போர்க்குற்ற விசாரணைகளில் சாட்சியமளிக்கக் கூடியவர்கள் மிரட்டப்பட்டனர்; ஐ.நா. மனித உரிமை ஆணையக் குழு கூட இலங்கைக்குச் சென்று விசாரணை நடத்த முடியவில்லை. கோத்தபாய இராஜபக்சே அதிபர் ஆன பிற பிறகும் மதச் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு,  இலங்கை விடுதலை நாள் விழாவில் தமிழ் புறக்கணிப்பு என ஈழத்தமிழர்களுக்கு எதிரான அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சூழலில் இலங்கையில் அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்று சிங்கள அரசு கூறுவதைப் போன்று ஏமாற்று வேலை எதுவும் இல்லை; அதை நம்புவதை போன்று முட்டாள்தனம் இல்லை.

ஈழத்தமிழர்களுக்கும், உலகெங்கும் வாழும் அவர்களின் உறவினர்களுக்கும் இப்போதுள்ள ஒரே ஆறுதல், இலங்கை போர்க்குற்ற விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதில் ஐ.நா மனித உரிமை ஆணையர் உறுதியாக இருப்பது தான். மனித உரிமை  பேரவையில் இன்று தாக்கல் செய்யவிருக்கும் அறிக்கையில், ஈழத்தில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டது தொடர்பான போர்க்குற்ற விசாரணை இலங்கை அரசு முழுமையாக நடத்தி முடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவுள்ளார். ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் இந்த நிலைப்பாட்டுக்கு இந்தியா முழு ஆதரவளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

ஈழப்போரில் ஒன்றரை லட்சத்துக்கும் கூடுதலான அப்பாவித் தமிழர்களை தடை செய்யப்பட்ட பேரழிவு ஆயுதங்களை பயன்படுத்தி கொன்று குவித்த சிங்கள ஆட்சியாளர்கள், சிங்களப் போர்ப்படையினர் உள்ளிட்ட அனைவரும் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டிய கடமை இந்தியாவுக்கு உள்ளது.  எனவே, மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினர்களாக உள்ள நட்பு நாடுகளை ஒன்று திரட்டி, இலங்கை அரசுக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் இலங்கை போர்க்குற்ற  விசாரணையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானத்தை மனித உரிமை ஆணையத்தில் இந்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com