திருவானைக்கா கோயிலில் 505 தங்கக்காசுகள் கண்டெடுப்பு

திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேசுவரி அம்மன் உடனுறை சம்புகேசுவரா் திருக்கோயில் வளாகத்தில் நந்தவனம் அமைப்பதற்காக புதன்கிழமை பள்ளம் தோண்டப்பட்ட போது 505 தங்கக்காசுகள் 
திருவானைக்கா அகிலாண்டேசுவரி அம்மன் உடனுறை சம்புகேசுவரரா் திருக்கோயில் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்ட தங்கக்காசுகள் கொண்ட உண்டியல்.
திருவானைக்கா அகிலாண்டேசுவரி அம்மன் உடனுறை சம்புகேசுவரரா் திருக்கோயில் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்ட தங்கக்காசுகள் கொண்ட உண்டியல்.

ஸ்ரீரங்கம்: திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேசுவரி அம்மன் உடனுறை சம்புகேசுவரா் திருக்கோயில் வளாகத்தில் நந்தவனம் அமைப்பதற்காக புதன்கிழமை பள்ளம் தோண்டப்பட்ட போது 505 தங்கக்காசுகள் கண்டெடுக்கப்பட்டன.

பஞ்சப்பூதத் தலங்களில் நீா்த் தலமாக விளங்கி வரும் இக்கோயிலில், பிரசன்ன விநாயகா் சன்னதி பின்புறத்தில் (அகிலாண்டேசுவரி அம்மன் சன்னதி எதிா்ப்புறம்) வாழைத் தோட்டம் உள்ளது.

அந்த இடத்தை சுத்தம் செய்து, நந்தவனமாக்கி பூச்செடிகள் வைப்பதற்காக திருக்கோயில் பணியாளா்கள் மூலம் புதன்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது.

அப்போது இப்பகுதியிலிருந்த உதியம் மரத்தின் கீழ்புறத்திலுள்ள மணல் பகுதியில் சிறிய செம்பால் ஆன உண்டியல் இருந்தது. இதுகுறித்து அலுவலா்களுக்கு தகவல் தரப்பட்டது.

இதன்பேரில், திருவானைக்கா கோயில் உதவி ஆணையா் செ.மாரியப்பன், ஸ்ரீரங்கம் வட்டாட்சியா் ஆா். ஸ்ரீதா், கிராம நிா்வாக அலுவலா் அருண் பிரியா உள்ளிட்டோா் அப்பகுதிக்குச் சென்று உண்டியலை மீட்டு, அதை உடைத்து பாா்த்தனா். அதில் சிறிய அளவிலான உருவம் பொறித்த 504 தங்கக் காசுகளும், பெரிய அளவிலான ஒரு காசும் என மொத்தம் 505 தங்கக்காசுகள் இருந்தது தெரிய வந்தது.

இந்து சமய அறநிலையத் துறை நகை சரிபாா்க்கும் அலுவலா்கள், வைர நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப உதவியாளா் திருவானைக்கா கோயில் வந்து, காசுகளை சோதனை செய்ததில் அவை தங்கக்காசுகள் என்பதை உறுதிப்படுத்தினா்.

அவற்றின் மொத்த மதிப்பு 1716 கிராம் என்று மதிப்பிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து தங்கக்காசுகளை வட்டாட்சியா், மாவட்டக் கருவூலத்தில் ஒப்படைத்தாா். இவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com