எல்.ஐ.சி பங்குகளை விற்பதை கைவிட வேண்டும்: கேஎஸ்.அழகிரி

எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்பதை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கே.எஸ். அழகிரி
கே.எஸ். அழகிரி

எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்பதை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் எத்தகைய பொருளாதாரப் பாதையில் பயணம் மேற்கொள்வது என்பது குறித்து தெளிவான பார்வையும், புரிதலும் இல்லாத காரணத்தால் பல தடுமாற்றங்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் மத்திய பா.ஜ.க. அரசின் அவலநிலை குறித்து படம் பிடித்து காட்டியிருப்பதை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடாதது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொருளாதார ஆய்வறிக்கையை எந்த மத்திய அரசும் இதுவரை புறக்கணித்ததில்லை. ஆனால், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதில் கூறப்பட்டுள்ள பல தகவல்களை கண்டும், காணாமல் இருந்தது பொருளாதார நிபுணர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மத்திய பா.ஜ.க. அரசின் நிதிநிலை படுபாதாளத்தை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதை தடுத்து நிறுத்துவதற்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வது குறித்து நிதி ஆயோக் பல யோசனைகளை தெரிவித்துள்ளது. 2019-20 ஆம் ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு மதிப்பில் ரூபாய் 90 ஆயிரம் கோடியை விற்க வேண்டுமென்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2017-18 இல் மத்திய பா.ஜ.க. அரசு ரூபாய் 1 லட்சம் கோடி மதிப்புள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட ரூபாய் 1 லட்சத்து 546 கோடி மதிப்பிலான பங்குகள் விற்கப்பட்டுள்ளன. இதை மத்திய பா.ஜ.க. அரசின் சாதனை என்று சொல்வதா ? பொதுத்துறை என்பது மத்திய அரசின் சொத்து. மக்களின் சொத்து. அதை தனியாருக்கு அடிமாட்டு விலையில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதை விட ஒரு மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது.

இந்நிலையில் இந்தியாவின் காமதேனுவாக கருதப்படுகிற எல்.ஐ.சி. நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை எதிர்த்து அதன் பாலிசிதாரர்கள், ஊழியர்கள் ஆகியோர் மிகுந்த பதற்றத்துடனும், அச்சத்துடனும் இருந்து வருகின்றனர். இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் மிகச் சிறந்த செயல்பாட்டின் காரணமாக தனியார் காப்பீட்டு நிறுவனங்களோடு கடுமையான போட்டி இருந்தாலும் 2018-19 ஆம் நிதியாண்டில் பாலிசிதாரர்களுக்கு வழங்கியுள்ள தொகை ரூபாய் 1.63 லட்சம் கோடி. பணம் பெற்றவர்கள் 2.6 கோடி பேர். 134 கோடி மக்களைக் கொண்ட இந்திய நாட்டில் 30 கோடி பாலிசிதாரர்களைக் கொண்ட எல்.ஐ.சி. நிறுவனத்தின் தனித்தன்மையையும், சுதந்திரத்தையும் சிதைத்து தனியாருக்கு தாரை வார்ப்பதை இந்திய குடிமக்கள் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 

2000 ஆம் ஆண்டில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட பின் 20 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் கடுமையான போட்டியை உருவாக்கியும், ஆயுள் காப்பீட்டுத் துறையில் மட்டும் சராசரியாக 1 சதவிகித சந்தைப் பங்கை மட்டுமே கொண்டிருக்கின்றன. இதை பார்க்கிற போது இந்திய மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரே நிறுவனமாக எல்.ஐ.சி. விளங்கி வருகிறது. 2018-19 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் திட்டமிட்டதை விட ரூபாய் 1.7 லட்சம் கோடி குறைவாகவே உண்மையான வருவாய் வந்துள்ளது. இதனால் தான் இந்திய பொருளாதாரம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய மக்களின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலனாக, உற்ற தோழனாக செயல்பட்டு வந்த எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்பதை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையெனில் நாடு தழுவிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com