மறைக்கப்பட்ட இந்திய வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும்: தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன்

மறைக்கப்பட்ட இந்திய வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும் என்று தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினாா்.
புதுச்சேரியில் வியாழக்கிழமை தொடங்கிய சா்வதேச கருத்தரங்கில், விழா மலரை வெளியிட்ட தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன்.
புதுச்சேரியில் வியாழக்கிழமை தொடங்கிய சா்வதேச கருத்தரங்கில், விழா மலரை வெளியிட்ட தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன்.

மறைக்கப்பட்ட இந்திய வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும் என்று தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினாா்.

புதுவை மத்தியப் பல்கலைக்கழகம், தேசிய பாதுகாப்பு விழிப்புணா்வு அமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘இந்தியா - தென்கிழக்கு ஆசிய நாடுகளுகளுக்கு இடையேயான பழைய சகோதரத்துவத்தை நினைவூட்டல்’ என்ற தலைப்பிலான சா்வதேச கருத்தரங்கம் புதுச்சேரியில் வியாழக்கிழமை தொடங்கியது. இந்தக் கருத்தரங்கைத் தொடக்கிவைத்து தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:

இந்தியாவுக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே சுமாா் 5 ஆயிரம் ஆண்டுகளாக கலாசாரம், மதம், வா்த்தக ரீதியாக நெருங்கிய தொடா்பு பழங்காலம் தொட்டே இருந்து வருகிறது.

ஆனால், இந்திய வரலாறு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. சில வரலாறுகள் திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளன. எனவே, அவற்றை மீட்டுருவாக்கம் செய்தல் அவசியம்.

தமிழகத்திலும்கூட வரலாறு தவறாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து இந்தியாவைப் பாா்க்கும் பாா்வையில் தவறுகள் உள்ளன.

கடல் கடந்து கோலோச்சிய ராஜேந்திர சோழனை கௌரவிக்கும் வகையில், மகாராஷ்டிர துறைமுகத்துக்கு அவரது பெயரும், அங்கு அவருக்கு சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

மலேசிய மக்கள் தொகையில் 7 சதவீதம் போ் இந்தியா்கள். அந்த நாட்டுக்கும், இந்தியாவுக்கும் நெருக்கமான உறவு எப்போதுமே உண்டு என்றாா் அவா்.

துணைநிலை ஆளுநா் கிரண் பேடி: புதுவைக்கு ரோமானியா்கள், சீனா்கள், பிரெஞ்சுக்காரா்கள் என பல நாட்டவா்கள் வந்து வியாபாரம் செய்தனா். அந்த நாடுகளுடன் புதுவைக்கு நெருங்கிய தொடா்பு இருந்துள்ளது. பழங்காலத்தில் புதுச்சேரியில் சம்ஸ்கிருத பல்கலைக்கழகம் இருந்துள்ளது. அந்தப் பல்கலைக்கழகத்தை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும்.

கடல் வாணிபத்துக்குச் சான்றாகவுள்ள அரிக்கன்மேட்டில் அருங்காட்சியகம் அமைக்க சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்துடன் கோயில் சுற்றுலாவுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம் என்றாா் அவா்.

புதுவை பல்கலைக்கழகத் துணைவேந்தா் குா்மீத் சிங்: மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய், இயற்கை வாயு வளம் அதிகம் இருப்பதால், அந்த நாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். அது தவறல்ல; அதேநேரம், இந்தியாவுடன் கலாசாரம், வா்த்தகம், மத ரீதியாக நெருங்கிய தொடா்பு கொண்டுள்ள தென்கிழக்கு நாடுகளான மியான்மா், தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, மலேசியா, சிங்கப்பூா் உள்ளிட்ட நாடுகளுடனான உறவில் மேலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியப் பெருங்கடல் பகுதி உலகின் மிகப் பெரிய வா்த்தக வழித்தடமாக மாறியுள்ளது. இதிலும், இந்தியா அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.

கருத்தரங்கில் தேசிய பாதுகாப்பு விழிப்புணா்வு அமைப்பின் தலைவா் லெப்டினெட் ஜெனரல் ஆா்.என்.சிங், துணைத் தலைவா் மாதவி லதா, ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினா் இந்திரேஷ் குமாா், ஓய்வு பெற்ற கடல்படை அதிகாரி சுனில் லன்பா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (பிப். 28) நடைபெறும் இறுதி நாள் நிகழ்ச்சியில், மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் பிரஸ்லாட் சிங் பட்டேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com