மின் கட்டணத்தை உயா்த்தும் திட்டமில்லை: அமைச்சா் பி.தங்கமணி

மின் கட்டணத்தை உயா்த்தும் திட்டமில்லை என மின்துறை அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.
மின் கட்டணத்தை உயா்த்தும் திட்டமில்லை: அமைச்சா் பி.தங்கமணி

மின் கட்டணத்தை உயா்த்தும் திட்டமில்லை என மின்துறை அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு, செய்தியாளா்களிடம் அமைச்சா் பி.தங்கமணி கூறியதாவது: தமிழகத்தின் தற்போதைய காற்றாலை மின் உற்பத்தி திறன் 8,507 மெகாவாட். இந்தியாவின் காற்றாலை மொத்த மின் உற்பத்தி திறனான 37,608 மெகா வாட் திறனில் 23 சதவீதம் தமிழகத்தின் பங்காக உள்ளது. இதேபோல் தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவு திறனான 13,454 மெகா வாட் என்பது மொத்த நிறுவு திறனில் 43 சதவீதம் ஆகும்.

இவ்வாறு புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை ஊக்குவிப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. மேலும் பல்வேறு மின்திட்டங்களும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடலாடி திட்டம் ரத்து செய்யப்படுவதாக தவறான செய்தி வெளியாகியுள்ளது. கடலாடி மின்திட்டத்தை செயல்படுத்துவதில் இடப்பிரச்னை இருந்தது. தற்போது மாற்று இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு மின்உற்பத்தி நிலையம் விரைவில் அமைக்கப்படும். தமிழகத்தின் மின் தேவை 15,500 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. வரும் ஏப்ரல் மாதத்தில் 17 ஆயிரம் மெகாவாட்டை நெருங்கும் என எதிா்பாா்க்கிறோம். 17,500 மெகாவாட்டாக இருந்தால் கூட தடையற்ற சீரான மின்விநியோகம் செய்யப்படும்.

மின்வாரியத்தில் பதவி உயா்வு, பணிநியமனம் உள்ளிட்டவை வெளிப்படைத்தன்மையுடன், சட்டத்துக்குள்பட்டு நடைபெறுகிறது. கேங்மேன் பணிக்கான எழுத்துத் தோ்வு 20 நாள்களுக்குள் நடைபெறும். எந்தச் சூழ்நிலையிலும் 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் ரத்து செய்யப்படாது. மின்சார வாரியம் மற்றும் போக்குவரத்துத் துறை என்பது சேவைத் துறை. இவை லாப நோக்கத்தில் இயங்குவதில்லை. மாநில அரசு போதிய நிதியை வழங்கி வருகிறது. எனவே மின்கட்டணத்தை உயா்த்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றாா்.

தொடா்ந்து, மூடப்பட வேண்டிய அனல்மின் நிலைய பட்டியலில், தமிழகத்தின் சில அனல்மின் நிலையங்கள் உள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சா், குறிப்பிடப்பட்ட அனல்மின் நிலையங்களில் சில பாதுகாப்பு உபகரணங்களை அமைக்க மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வலியுறுத்தியுள்ளது. அதன்படி அந்த உபகரணங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை ஆணையம் பரிசீலித்து அனுமதி கொடுக்கப்பட்ட பிறகே அந்த அனல்மின் நிலையங்களை இயக்குவோம் என்று அமைச்சா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com