சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன் காலமானார்

சட்டப்பேரவை முன்னாள் தலைவரும், அதிமுக மூத்த தலைவருமான பி.எச்.பாண்டியன் (74) சனிக்கிழமை காலமானார்.
சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன் காலமானார்

சட்டப்பேரவை முன்னாள் தலைவரும், அதிமுக மூத்த தலைவருமான பி.எச்.பாண்டியன் (74), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் காலமானார். இவர் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் 1945-ஆம் ஆண்டு மார்ச் 29-ல் பிறந்தவர். சென்னை பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.

கடந்த 1977-ஆம் ஆண்டு சென்னை பார் கவுன்சிலில் சேர்ந்தார். 17.04.1968 முதல் வழக்குரைஞராக பணியாற்றத் தொடங்கி 17.04.2018 அன்று சட்டத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்தார்.

தமிழக சட்டப்பேரவைக்கு வானளாவ அதிகாரம் உண்டு என்பதை நிரூபித்த முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும், அஇஅதிமுக சட்ட ஆலோசகருமான முனைவர் பி.எச்.பாண்டியன், அஇஅதிமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக, மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அதிமுகவைத் துவங்கியபோதும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சோதனையான காலகட்டங்களிலும் பக்கபலமாக இருந்தவர் என்ற சிறப்புக்குரியவர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொடைக்கானல் விடுதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டபோது, அவருக்கு ஆதரவாக ஆஜாராகி வாதாடி பிணையில் வெளிவர முக்கிய காரணமாக திகழ்ந்தவர்.

பிற்படுத்தப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.

1990-ஆம் ஆண்டு திருநெல்வேலி, நான்குநேரி மாவட்டங்களுக்கு கொடுமுடியாறு திட்டத்தை விரைந்து செயலப்டுத்த வலியுறுத்தி உச்ச நீதிமன்றம் ஆணையிட வேண்டி தலைமை நீதிபதியிடம் முறையிட்டார். அதுபோன்று அதே காலகட்டத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தை போக்கும் விதமாக மத்திய அரசு உடனடியாக 10 ஆயிரம் டன் அரிசியை உடனடியாக விடுவிக்க வேண்டியும் வலியுறுத்தினார். 

1986-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தலைவராக இருந்த காலகட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 17 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

1995-ஆம் ஆண்டில் மூத்த வழக்குரைஞராக பதவி உயர்வு பெற்றார்.

சென்னை வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் 2015-ஆம் ஆண்டு அக்டோபர் 03-ஆம் தேதி, ஒய்எம்சிஏ சார்பில் 2017-ஆம் ஆண்டு ஜூன் 06-ஆம் தேதி மற்றும் சென்னை லயன்ஸ் சங்கம் சார்பில் 2018-ஆம் ஆண்டு மார்ச் 18-ஆம் தேதி சட்டத்துறையில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

1977-1980, 1980-1984, 1985-1989 and 1989-1991 ஆகிய காலகட்டங்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

1980 முதல் 1984 வரையிலான காலகட்டத்தில் தமிழக சட்டப்பேரவைத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1985-ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரை எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலகட்டத்தில் தமிழக சட்டப்பேரவைத் தலைவராக பதவி வகித்துள்ளார். 

1999 முதல் 2004 வரையிலான காலகட்டத்தில் 13-ஆவது மக்களவையின் உறுப்பினராக நெல்லை தொகுதியில் இருந்து தேர்வானார்.

மனைவி சிந்தியா பாண்டியன், மனோன்மனியம் சுந்தரனார் பல்கலை.யில் முன்னாள் துணை வேந்தராக இருந்துள்ளார்.

மகன்கள் பால் அரவிந்த் பாண்டியன், பால் மனோஜ் பாண்டியன், மற்றும் பி.எச்.வினோத் பாண்டியன் ஆகிய 3 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர்களாக உள்ளனர். மற்றொரு மகன் பால் நவீன் பாண்டியன் மற்றும் மகள் தேவமனி தீபக் ஆகியோர் மருத்துவர்கள் ஆவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com