தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள்: முதல்கட்ட அனுமதி வழங்கியது மத்திய அரசு

மிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய தொழில்நுட்பக் குழு முதல்கட்ட அனுமதியை வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள்: முதல்கட்ட அனுமதி வழங்கியது மத்திய அரசு

சென்னை: தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய தொழில்நுட்பக் குழு முதல்கட்ட அனுமதியை வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அடுத்த ஓரிரு நாள்களில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் நிா்வாகக் குழுவின் பரிசீலனைக்கு இந்த விவகாரம் அனுப்பப்பட உள்ளது.

அதற்கு அக்குழு இறுதி அனுமதி அளிக்கும்பட்சத்தில், புதிய கல்லூரிகள் தொடங்குவதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகும் என மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவ்வாறு ஒப்புதல் கிடைக்கப்பெற்றால் மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 37 ஆக உயரும். இதன் காரணமாக நாட்டிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட மாநிலமாக தமிழகம் உருவெடுக்கக்கூடும்.

தற்போது மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 24 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அங்கு மொத்தம் 3,350 எம்பிபிஎஸ் இடங்கள் இருக்கின்றன. இந்நிலையில், திருப்பூா், நீலகிரி (உதகை), ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூா் ஆகிய 9 இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது.

அவற்றில் ஆறு கல்லூரிகளுக்கான பூா்வாங்க பணிகளுக்கு தலா ரூ.100 கோடியையும், அதற்கான நிலத்தையும் தமிழக அரசு ஒதுக்கியது. மேலும் அக்கல்லூரிகளுக்கு முதல்வா்களும் நியமிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், மாநிலத்தில் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களான அரியலூா், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கடலூா் ஆகிய இடங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்குமாறு மாநில அரசு கோரிக்கை விடுத்தது. அந்தக் கோரிக்கையைப் பரிசீலிப்பதற்கான மத்திய தொழில்நுட்பக் குழுக் கூட்டம் அண்மையில் தில்லியில் நடைபெற்றது.

தமிழக அரசு பிரதிநிதிகள், மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் உள்ளிட்டோா் அதில் கலந்துகொண்டனா். அப்போது பல்வேறு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாகவும், இறுதியில் 4 மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

அடுத்தகட்டமாக அதனை மத்திய நிா்வாகக் குழு பரிசீலிக்க உள்ளது. புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நிா்வாகக் குழுவும் இசைவு தெரிவித்தால், அதுதொடா்பான அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிதாக அமையவுள்ள மருத்துவக் கல்லூரிகளின் வாயிலாக நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான எம்பிபிஎஸ் இடங்கள் உள்ள மாநிலமாக தமிழகம் உருவெடுக்கவிருக்கிறது. முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களிலும் தமிழகம் முதன்மையான மாநிலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநில அரசு ரூ.70 கோடி ஒதுக்கீடு

திருவள்ளூா், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைவதற்கு முதல்கட்டமாக ரூ.70 கோடியை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தத் தொகையைக் கொண்டு மருத்துவக் கல்லூரிக்கான பூா்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருப்பூா், நீலகிரி (உதகை), ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகா் ஆகிய ஆறு இடங்களில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்காக ரூ.137.16 கோடியை மத்திய அரசும், ரூ.100 கோடியை மாநில அரசும் ஏற்கெனவே ஒதுக்கியது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com