குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: டிஎன்பிஎஸ்சி

குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி
டிஎன்பிஎஸ்சி


குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒளிவு மறைவற்ற நேர்மையான நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே தேர்வாணையத்தின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கையுடன் இருக்குமாறு தேர்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அண்மையில் நடந்து முடிந்த தொகுதி 4க்கான தேர்வில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய இதர மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகப்படியான எண்ணிக்கையில் முதல் 100 தரவரிசைக்குள் வந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

1. இராமநாதபுரம் மாவட்டத்தில் 8 வட்டங்களில் 128 தேர்வு மையங்களில் 32,879 விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நடைபெற்றது. இதிலிருந்து 497 விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை வட்டங்களில் பல்வேறு தேர்வுக்கூடங்களில் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களின் விவரங்கள் பின்வருமாறு: 

2. மேற்கூறிய 40 விண்ணப்பதாரர்களும் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

3. மேற்கூறிய விண்ணப்பதாரர்கள் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரையைச் சேர்ந்த வெவ்வேறு மையங்களில் வெவ்வேறு அறைகளில் தேர்வு எழுதியுள்ளனர். எனவே பல்வேறு செய்திகளில் தெரிவித்துள்ளது போல் இந்த 57 நபர்களும் ஒரே அறையிலிருந்தோ அல்லது ஒரே தேர்வுக்கூடத்திலிருந்தோ தெரிவு செய்யப்படவில்லை.

4. மேலும் இம்மையங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களில் ஒட்டுமொத்த தரவரிசை அடிப்படையில் முதல் 1000 இடங்களில் 40 நபர்களும், முதல் 100 இடங்களில் 35 நபர்களும் உள்ளனர்.

5. இந்தக் குற்றச்சாட்டு குறித்து மேற்கூறிய விண்ணப்பதாரர்களின் விடைத்தாள்கள், ஆவணங்கள் மட்டுமின்றி இத்தேர்வுடன் தொடர்புடைய பிற ஆவணங்கள் அனைத்தும் மிகுந்த கவனத்துடன் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இது குறித்து எவ்வித பாரபட்சமும் இன்றி மேலும் விசாரணை செய்யப்பட்டு விரைவில் உண்மை நிலை அறிவிக்கப்படும். இவ்விசாரணையில் தவறு ஏதேனும் கண்டறியப்பட்டால் அதற்குக் காரணமான நபர்கள் மீது சட்டப்படி மிகக் கடுமையான குற்ற நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும். எனவே தேர்வாணையத்தின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை கொண்டு அமைதி காக்குமாறு தேர்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்று தேர்வாணைய செயலாளர் நந்தகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com