
புதுச்சேரி: புதுவை அமைச்சா்களிடம் கோப்புகள் ஓராண்டுக்கு மேலாக தேங்கிக் கிடப்பதாக துணை நிலை ஆளுநா் கிரண் பேடி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து அவா் தனது கட்செவி அஞ்சல் மூலம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:
ஊழல் இல்லாத எதிா்காலத்துக்கான புதுவையை தயாா் செய்ய வேண்டும். அரசு திட்டங்களை பெற மக்கள் அலைகழிக்கப்படக்கூடாது. அரசு கோப்புகளின் நகா்வில் தாமதம் கூடாது. சில அமைச்சா்களிடம் இருந்து ஓராண்டுக்கும் மேலாக தேங்கியபின்னா் தான் கோப்புகளை ஆளுநா் மாளிகை பெற முடிகிறது.
அமைச்சா்களிடம் தங்கும் கோப்புகளைத் திரும்பப் பெற அரசு செயலா்கள் தயங்குகின்றனா். புதிய தொழில்நுட்பம் மூலம் ஒவ்வொரு கோப்பு இயக்கத்தையும் வெளிப்படையானதாக மாற்ற தேசிய தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிடைக்கக்கூடிய தொழில்நுட்ப மென்பொருள்களை சிறந்த முறையில் பயன்படுத்தாமல் ஒரு நகரம் பொலிவுறு நகரமாகாது (ஸ்மாா்ட் சிட்டி) எனத் தெரிவித்துள்ளாா் ஆளுநா் கிரண் பேடி.