Enable Javscript for better performance
வெளிநடப்பு என்பது எதிர்ப்பைக் காட்டுவதற்கான ஓர் அடையாளம்: மு.க. ஸ்டாலின்- Dinamani

சுடச்சுட

  

  வெளிநடப்பு என்பது எதிர்ப்பைக் காட்டுவதற்கான ஓர் அடையாளம்: மு.க. ஸ்டாலின்

  By DIN  |   Published on : 10th January 2020 05:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  stalin tweets about corporation engineer

  திமுக தலைவர் ஸ்டாலின்

   

  தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக செய்யும் வெளிநடப்புகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

  இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஆளுநர் உரையுடன் தொடங்கிய இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டம், ஏதோ சடங்குக்காக,  ‘கூடினோம்.. கலைந்தோம்’ என்று முடிவடைந்திருக்கிறது. 

  மாநில மக்களின் நலன்களைக் காக்கவும் உரிமைகளை மீட்கவும் ஆரோக்கியமான விவாதங்களை மேற்கொண்டு, அதற்கேற்ப சட்டங்களையும் திட்டங்களையும் வகுக்கவேண்டிய சட்டப்பேரவையை,  ஆளுந்தரப்பினரின் பொழுது போக்குக்காகப் பயன்படுத்திடும் போக்கே  தொடர்ந்து  கொண்டிருக்கிறது.

  ஜனவரி 6ஆம் நாள் சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரை என்பது, ஆட்சியாளர்களின் குரல் ஒலியே தவிர, அது இந்த ஆட்சியைப் பற்றிய ஆளுநரின் மதிப்பீடல்ல. ஆட்சியாளர்களின் குரல் என்பது, தாங்கள் ஆளுகின்ற மாநிலத்தின் நலன் சார்ந்து இருந்திட வேண்டும். ஆனால், வெற்றுப் புகழ்ச்சிகளையும், வீண் பாராட்டுரைகளையும் திணித்துக் கொண்ட காகிதக்கட்டாக ஆளுநர் உரை இருந்த காரணத்தால்தான், அதனைப் புறக்கணித்து தி.மு.கழகத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தோம். 

  ஆளுநர் பதவிக்குரிய மதிப்பையும் மாண்பையும் உணர்ந்தே செயல்பட்டு வருகிறது. தற்போதைய ஆளுநர் அவர்களிடமும் அதே மதிப்பினைக் கொண்டுள்ளது. ஆளுநர் அவர்களும் அவரது  உரையைத் தொடங்கியபோது, நான் எழுந்து பேச முற்பட்டதும், “மரியாதைக்குரிய எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கு என்னுடைய வேண்டுகோள். நீங்கள் பேச்சுத் திறமைமிக்கவர். இப்போது நான் உரையாற்றத் தொடங்கியுள்ளேன். இது தொடர்பாக ஆளுநர் உரை மீதான விவாதம் வரும்போது நீங்கள் பேச்சுத் திறனை வெளிப்படுத்துங்கள்” எனக் குறிப்பிட்டுப் பேசியதை அனைவரும் கவனித்தார்கள். 

  மக்களின் அடிப்படைத் தேவைகள், வாழ்வாதாரம் தொடர்பான அத்தியாவசியப் பிரச்னைகள், மாநிலத்தின் நிதிநிலையை மோசமாக்கியுள்ள கடன்சுமை இவற்றைப்  புறந்தள்ளிவிட்டு, ஆளுநர் உரையினை ஆளுந்தரப்பு தயாரித்துக் கொடுத்திருந்ததால்தான், ஜனநாயக  வழியில் நம் எதிர்ப்பைப் பதிவு செய்திடும் வகையில் ஆளுநர் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. அது குறித்து, பேரவை வளாகத்திலேயே ஊடகத்தினரிடம் விளக்கமாகத் தெரிவித்தேன். 

  வெளிநடப்பு என்பது எதிர்ப்பைக் காட்டுவதற்கான ஓர் அடையாளம். அரசியல் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகப்பூர்வமான அணுகுமுறை. அதைத்தான் மக்கள் நலனில் அக்கறை கொண்ட தி.மு.க மேற்கொண்டது. எதிர்ப்பைப் பதிவு செய்த பிறகு மீண்டும் பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்பதுதான் கழகத்தின் மரபு. அந்த வகையில், ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்ற ஜனவரி 7ஆம் நாள் பேரவையில், மத்திய பா.ஜ.க. அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கழகத்தின் சார்பில் கொடுத்த  தீர்மானத்தை நிறைவேற்றுமாறு தி.மு.கழகமும் தோழமைக் கட்சியினரும் வலியுறுத்தினோம். இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற பேரவை உறுப்பினர்கள் சிலரும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தனர். 

  கேரளத்தை ஆளும் இடதுசாரி அரசு அந்த மாநிலத்தில்,  எதிர்க்கட்சிக் கூட்டணியையும் இணைத்துக் கொண்டு, இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப் பேரவையில்  தீர்மானமே நிறைவேற்றியுள்ளது. 

  அந்த வகையில், அ.தி.மு.க. அரசும் தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் திமுக கோரிக்கை வைத்தது. ஆனால்  மாநில அ.தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றும் எண்ணமோ தெம்போ துணிவோ சிறிதும் இல்லை என்பதை உணர்ந்து பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்தோம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai