சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் "ஆருத்ரா தரிசனம்" விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
ஆருத்ரா தரிசனம்
ஆருத்ரா தரிசனம்

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் "ஆருத்ரா தரிசனம்" விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

சிதம்பரம் ஶ்ரீநடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசனம் வெள்ளிக்கிழமை மாலை 5.10 மணிக்கு நடைபெற்றது. ஸ்ரீமந்நடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பு உள்ள நடனப்பந்தலில் நடனமாடி ஆருத்ரா தரிசன காட்சியளித்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று 'நடராஜா', 'சிவ சிவா' என கோஷமிட்டு தரிசனத்தை கண்டுகளித்தனர்.

ஸ்ரீநடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன உத்சவம் கடந்த ஜன.1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜன.9-ம் தேதி வியாழக்கிழமை தேர்த்திருவிழா நடைபெற்றது.  பின்னர் இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீமந்நடராஜமூர்த்திக்கும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கும் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது.  ஜன.10ம் தேதி  வெள்ளிக்கிழமை  அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் ஶ்ரீநடராஜமூர்த்திக்கும், ஶ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மகாபிஷேகம் நடைபெற்றது. பால், தேன், விபூதி, பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்டவை குடம் குடமாக அபிஷேகம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்த்து தரிசித்தனர். மகாபிஷேக நிகழ்ச்சியில் முன்னாள் மேகாலயா ஆளுநர் சண்முகநாதன், கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம. ஶ்ரீ அபிநவ் உள்ளிட்டோர் பங்கேற்று தரிசித்தனர்.

பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீநடராஜமூர்த்திக்கும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கும் திருவாபரண அலங்காரமும், சிறப்பு அர்ச்சனைகளும் நடைபெற்றன. சித்சபையில் உத்சவ ஆச்சாரியாரால் ரகசிய பூஜை நடத்தப்பட்டது. பஞ்சமூர்த்திகள் வீதி உலா வந்த பின்னர் மாலை 5.10 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமந்நடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் நடனப்பந்தலில் முன்னும், பின்னும் 3 முறை சென்று நடனமாடி ஆருத்ரா தரிசன காட்சியளித்தனர். பின்னர் சித்சபா பிரவேசம் நடைபெற்றது. தரிசனக் காட்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர். ஜன.11-ம் தேதி முத்துப்பல்லக்கு வீதி உலா காட்சி நடைபெறுகிறது.

உத்சவ ஏற்பாடுகளை பொது தீட்சிதர்களின் செயலாளர் எஸ்.கே.பாலகணேச தீட்சிதர், துணைச்செயலாளர் சு.வை.நவமணி தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் என்.சிதம்பர சபாபதி தீட்சிதர் ஆகியோர் செய்திருந்தனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஶ்ரீ.அபிநவ் மேற்பார்வையில் சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.கார்த்திகேயன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் ஆயிரக்கணக்கான போலீஸார்  பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை ஆணையர் பி.வி.சுரேந்திரஷா செய்திருந்தார்.

தரிசனம் காலதாமதம் மக்கள் அவதி: நடராஜர் கோயில் தரிசன திருவிழா கடந்த காலங்களில் 2 மணிக்குள் நடைபெறுவது வழக்கமாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக மாலை 4 மணிக்கு மேல் தான் தரிசனம் நடைபெறுகிறது. சிதம்பரம் உதவி ஆட்சியர் விசுமகாஜன் தலைமையில் நடைபெற்ற அனைத்துத்துறை ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பிற்பகல் 2 மணிக்குள் தரிசனத்தை நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் பொதுதீட்சிதர்களால் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட ஆருத்ரா தரிசன விழா மாலை 5.10 மணிக்குதான் நடைபெற்றது.   இதனால் காலை முதல் விரதமிருந்து தரிசனம் முடிந்த பின்பு உணவு அருந்தும் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் கோயில் வளாகத்தில் கழிப்பறை வசதி இல்லாததால், பெண்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

அன்னதானம்: கடலூர் மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் கிழக்கு கோபுர வாயிலில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதான நிகழ்ச்சியை மாவட்டத் தலைவர் ஏ.யாகமூர்த்தி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் பி.சுவாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் வி.சங்கர், கே.கணேசன், என்.ராஜா, சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்கம் சார்பில் அதன் மாநிலத் தலைவர் ஜி.சேகர் தலைமையில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  

இதேபோல் சிதம்பரம் ஓமக்குளம் நந்தனார் மடத்தில் உள்ள செளந்தரநாயகி சமே சிவலோகநாதர் ஆலயத்திலிருந்து ஶ்ரீநந்தனார் உருவச்சிலை ஊர்வலம் புறப்பட்டு நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் மடத்தை சென்றடைந்தது. கீழசன்னதியில் நந்தனாருக்கு பொதுதீட்சிதர்கள் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ நீலகங்காதரன், பேராசிரியர் டாக்டர் தெய்வநாயகம், நந்தனார் மட நிர்வாகிகள் டாக்டர் ஏ.சங்கரன், கே.அன்பழகன், டி.ஜெயச்சந்திரன், டி.கே.எம்.வினோபா, இளைய அன்பழகன், பி.பன்னீர்செல்வம்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com