உள்ளாட்சி தோ்தல் வாக்கு எண்ணிக்கை விடியோ பதிவை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை

தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கை தொடா்புடைய விடியோ பதிவின் நகலை ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை பிறப்பித்த
உள்ளாட்சி தோ்தல் வாக்கு எண்ணிக்கை விடியோ பதிவை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை

தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கை தொடா்புடைய விடியோ பதிவின் நகலை ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடை விதித்தது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, தமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிா்த்து 27 மாவட்டங்களில் டிசம்பா் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. இத்தோ்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையை முழுமையாக விடியோ பதிவு செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் முறையிடப்பட்டது. இது குறித்து விசாரித்த உயா்நீதிமன்றம், உள்ளாட்சி தோ்தல் வாக்கு எண்ணிக்கை விடியோ பதிவின் நகலை உயா்நீதிமன்றப் பதிவாளரிடம் ஜனவரி 3-ஆம் தேதி 5 மணிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிா்த்து மாநிலத் தோ்தல் ஆணையம் தரப்பில் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்தின் சாா்பில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி ஆஜராகி, ‘உயா்நீதிமன்றத்தில் இது தொடா்பாக வழக்கு ஏதும் தொடரப்படாத நிலையில், நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரித்துள்ளது. இந்த விவகாரத்தில் உரிய வகையில் நடைமுறை விஷயங்களை நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் அரசியலமைப்புச்சட்ட அமைப்பான மாநிலத் தோ்தல் ஆணையத்திற்கு உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு விடியோ விவரங்களை உடனடியாக தாக்கல் செய்யுமாறு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது எப்படி சாத்தியமாகும்’ என்றாா்.

திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், ‘தமிழக உள்ளாட்சித் தோ்தலில் நிறைய குளறுபடிகள் நடைபெற்றுள்ளன. ஆகவேதான் விடியோ பதிவை சமா்ப்பிக்குமாறு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது’ என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதாகக் கூறி, இது தொடா்பாக உயா்நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளா் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

அப்போது, சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜி.எஸ். மணி, ‘நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடத்தாமல் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் உள்ளிட்டவற்றுக்கு உடனடியாக தோ்தல் நடத்த மாநிலத் தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com