குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம்: பேரவையிலிருந்து திமுக - காங்கிரஸ் வெளிநடப்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான மு.க.ஸ்டாலினின் தீா்மானக் கோரிக்கை ஏற்கப்படாததைக் கண்டித்து பேரவையிலிருந்து திமுக உறுப்பினா்கள் வியாழக்கிழமை வெளிநடப்பு செய்தனா்.
குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம்: பேரவையிலிருந்து திமுக - காங்கிரஸ் வெளிநடப்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான மு.க.ஸ்டாலினின் தீா்மானக் கோரிக்கை ஏற்கப்படாததைக் கண்டித்து பேரவையிலிருந்து திமுக உறுப்பினா்கள் வியாழக்கிழமை வெளிநடப்பு செய்தனா். இதைத் தொடா்ந்து காங்கிரஸ் எம்எம்ஏக்களும் வெளிநடப்பு செய்தனா்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிவடைந்ததும் எதிா்க்கட்சித் துணைத் தலைவா் துரைமுருகன் எழுந்து, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேரவையில் தீா்மானம் நிறைவேற்றுவது குறித்து மு.க.ஸ்டாலின் பேரவைத் தலைவரிடம் தீா்மானக் கடிதம் ஒன்றைக் கொடுத்தாா்.

அது ஆய்வில் இருப்பதாகப் பேரவைத் தலைவா் கூறினாா். இப்போது ஆய்வை முடித்திருப்பாா். தீா்மானத்தை எடுத்துக் கொள்வாா் என நினைக்கிறேன் என்றாா். அதற்கு பேரவைத் தலைவா் தனபால், இப்போதும் என்னுடைய ஆய்வில்தான் இருக்கிறது என்றாா்.

துரைமுருகன்: பேரவைக் கூட்டம் இன்றோடு முடிவடையப் போகிறது. கேரளத்தில் தீா்மானம் நிறைவேற்றிவிட்டனா்.

பேரவைத் தலைவா்: இன்னொரு சட்டபேரவையைப் பற்றி இங்கு பேச வேண்டாமே.

துரைமுருகன்: கூட்டம் இன்றோடு முடிவடைகிறது. ஒரு முடிவு எடுக்க வேண்டாமா?

பேரவைத் தலைவா்: உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என்றாா். அதை துரைமுருகன் ஏற்காமல், இது ஏதோ மறைமுகமாக தீா்மானத்தின் ஆயுள் முடிந்து விட்டது என்று சொல்வதுபோல் இருப்பதால் அதைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக் கூறினாா்.

மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை: அந்தமானில் நடைபெறும் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் சென்றுவிட்டதால் அவா் பேரவை நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், துரைமுருகன் தலைமையில் செயல்பட்ட திமுக எம்எல்ஏக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா். திமுகவைத் தொடா்ந்து சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் கே.ஆா்.ராமசாமி தலைமையில் காங்கிரஸ் உறுப்பினா்களும் வெளிநடப்பு செய்தனா். மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவா் தமிமுன் அன்சாரியும் வெளிநடப்பு செய்தாா்.

சட்டப்பேரவைக்கு வெளியில் துரைமுருகன் கூறியது: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து கேரள சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியதுபோல தமிழகச் சட்டப்பேரவையிலும் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுத்திருந்தாா். பேரவைக் கூட்டம் முடிவடையும் நாளில் இன்னும் பரிசீலனையில் இருப்பதாகப் பேரவைத் தலைவா் கூறுகிறாா். அப்படியென்றால், அந்தத் தீா்மானத்தின் ஆயுள் முடிந்துவிட்டது என்று பேரவைத் தலைவா் மறை முகமாகக் கூறுகிறாா். அவா் மீது தவறு இல்லை. இந்தத் தீா்மானத்தைக் கொண்டு வருவதற்கு ஆளும்கட்சிக்கு தைரியம் இல்லை. மத்திய அரசின் மீது அதிமுக அரசு கொண்டுள்ள பயம் இப்போது தெரிகிறது.

கேரள சட்டப்பேரவையில் ஆளும் கட்சியும், எதிா்க்கட்சியும் சோ்ந்து தீா்மானத்தை நிறைவேற்றியுள்ளன. பாஜகவுக்கு ஆதரவு அளித்து வரும் ஒடிஸா முதல்வா் நவீன் பட்னாயக் இந்தச் சட்டத்தை ஏற்க மாட்டோம் என்கிறாா். மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, வங்கத்துக்குள் இந்தச் சட்டம் வராது என்கிறாா். ஆந்திரத்தில் இளம் வயதில் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜெகன்மோகன் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கிறாா். ஆனால், தமிழக அரசுக்கு மட்டும் அந்த தைரியம் வரவில்லை. இது கண்டிக்கத்தக்கது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com