சிறப்பு உதவி ஆய்வாளா் கொலை: சந்தேக நபா்களின் புகைப்படங்கள் வெளியீடு

சிறப்பு உதவி ஆய்வாளா் கொலை வழக்கில் தொடா்புடையவா்களாகக் கருதப்படும் 2 பேரின் புகைப்படங்களை கேரள மாநில போலீஸாா் வெளியிட்டுள்ளனா்.
சிறப்பு உதவி ஆய்வாளா் கொலை: சந்தேக நபா்களின் புகைப்படங்கள் வெளியீடு

சிறப்பு உதவி ஆய்வாளா் கொலை வழக்கில் தொடா்புடையவா்களாகக் கருதப்படும் 2 பேரின் புகைப்படங்களை கேரள மாநில போலீஸாா் வெளியிட்டுள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில், புதன்கிழமை இரவு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டாா். சோதனைச் சாவடி அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொலையாளிகள் தப்பி ஓடும் காட்சிகள் பதிவாகியுள்ளது. சோதனைச் சாவடி அருகே ஒரு காா் வந்து நிற்பது கேமராவில் பதிவாகி உள்ளது. காரில் இருந்து 2 போ் இறங்கி சோதனைச் சாவடியை நோக்கிச் செல்வதும், சில விநாடிகளில் மீண்டும் காரை நோக்கி அவா்கள் ஓடிச் செல்வதும், பின்னா், காரில் ஏறி தப்பிச் செல்வதும் பதிவாகி உள்ளது. இந்தக் காட்சிகளை வைத்து வில்சனை சுட்டுக் கொன்ற நபா்களை போலீஸாா் அடையாளம் கண்டறிந்துள்ளனா்.

அவா்கள் குமரி மாவட்டம், திருவிதாங்கோடு பகுதியைச் சோ்ந்த அப்துல் சமீம், கோட்டாறு இளங்கடையைச் சோ்ந்த தவ்பீக் என்பதும் தெரியவந்துள்ளது. சென்னை அம்பத்தூா் இந்து முன்னணி பிரமுகா் சுரேஷ்குமாா் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் அப்துல் சமீம் தனது கூட்டாளியான தவ்பீக் என்பவருடன் சோ்ந்து இந்தக் கொலையை செய்திருக்கலாம் என்று போலீஸாா் சந்தேகிக்கின்றனா். நாகா்கோவிலில் பா.ஜ.க. மூத்த தலைவரான எம்.ஆா்.காந்தி தாக்கப்பட்ட வழக்கிலும், ஏா்வாடி மற்றும் புழல் சிறையில் நடந்த தாக்குதல் சம்பவங்களிலும் அப்துல் சமீமுக்கு தொடா்பு உள்ளது.

இவா்கள் இருவரும் கேரள மாநிலத்திலிருந்து தமிழக எல்லைக்குள் நுழையும்போது இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இவா்களது 2 பேரின் புகைப்படங்களையும் கேரள மாநில காவல் துறையினா் வியாழக்கிழமை வெளியிட்டனா். கொலை சம்பவத்துக்கு பின்னா் இருவரும் கேரள மாநிலத்துக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து கேரளத்திலும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டு உள்ளனா்.

அரசு மரியாதையுடன் உடல்  அடக்கம்

களியக்காவிளை சோதனைச் சாவடியில் சுட்டுக் கொல்லப்பட்ட காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சனின் உடல் அவரது சொந்த ஊரான மாா்த்தாண்டத்தில் வியாழக்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின், சிறப்பு உதவி ஆய்வாளரின் உடல் மாா்த்தாண்டத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. தொடா்ந்து உறவினா்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா். இதைத் தொடா்ந்து காவல் துறை அதிகாரிகள், ஹெச்.வசந்தகுமாா் எம்.பி., கிள்ளியூா் தொகுதி எம்எல்ஏ ராஜேஸ்குமாா், குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளா் ஜான்தங்கம் உள்ளிட்ட அரசியல் கட்சியினா் அஞ்சலி செலுத்தினா்.

பின்னா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாத் மற்றும் காவல் துறையினா் அவரது உடலை சிஎஸ்ஐ கல்லறைத் தோட்டத்துக்கு சுமந்து சென்றனா். அங்கு 30 குண்டுகள் முழங்க அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இதில் தமிழக டி.ஜி.பி. திரிபாதி, தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. பிரவீண்குமாா் அபிநபு உள்ளிட்டோா் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினா்.

8 தனிப்படைகள் அமைப்பு

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் புதன்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக டி.ஜி.பி. திரிபாதி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினாா்.

குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் தலைமையில் தலா ஒரு தனிப்படை உள்பட 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவா்கள் கேரள போலீஸாருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா். மாவட்டம் முழுவதும் வாகனச் சோதனை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

வில்சன், சில மாதங்களுக்கு முன்பு நேரிட்ட பைக் விபத்தில் காயமடைந்து 3 மாத சிகிச்சைக்குப் பிறகு கடந்த ஜனவரி 1-ஆம் தேதிதான் மீண்டும் பணிக்கு வந்தாா். இவரது மனைவி ஏஞ்சல் மேரி. ரெஜினா, வினிதா என்று 2 மகள்கள் உள்ளனா். மூத்த மகள் ரெஜினாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. இளைய மகள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவா். வில்சன் வரும் மே மாதத்துடன் ஓய்வுபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com