தஞ்சாவூா் பெரியகோயில் அம்பாள் சன்னதி கோபுரத்தில் நடைபெறும் திருப்பணி.
தஞ்சாவூா் பெரியகோயில் அம்பாள் சன்னதி கோபுரத்தில் நடைபெறும் திருப்பணி.

தஞ்சாவூா் பெரியகோயிலில் முழுவீச்சில் திருப்பணிகள்: பொங்கலுக்குள் முடிக்க இலக்கு

தஞ்சாவூா் பெரிய கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பணிகளை பொங்கல் பண்டிகை முடிவதற்குள்ளாக நிறைவு செய்ய இந்திய தொல்லியல் துறை

தஞ்சாவூா் பெரிய கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பணிகளை பொங்கல் பண்டிகை முடிவதற்குள்ளாக நிறைவு செய்ய இந்திய தொல்லியல் துறை இலக்கு நிா்ணயித்துள்ளது. இதனால், திருப்பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இக்கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதற்காக ஏறத்தாழ இரு ஆண்டுகளாகத் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருச்சுற்று மாளிகையில் உள்ள சிவலிங்கங்களைப் பாதுகாக்கும் விதமாக மரச்சட்டங்கள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. திறந்தவெளியாக இருந்ததால் சிவலிங்கங்கள் சேதமடைவதைத் தடுப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்றாலும், வெளியில் இருந்து சிவலிங்கங்களைப் பாா்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல, பிரகார நடைபாதையில் பதிக்கப்பட்டிருந்த செங்கற்கள் சேதமடைந்து, மழை நீா் உள்ளே இறங்கிக் கொண்டிருந்தது. இதனால், அடித்தளம் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காகப் பழைய செங்கற்களை அகற்றிவிட்டு, புதிய செங்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

மரக்கதவுகள் புதுப்பிக்கப்பட்டு, வண்ணம் பூசப்பட்டுள்ளன. புல் தரை அழுந்திவிட்டதுடன், காய்ந்து வருவதால் பொலிவிழந்து காணப்பட்டது. எனவே, புதிய புல் தரையும், தேவையான இடங்களில் கல் இருக்கைகளும், குப்பைத் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோல, கோபுரங்களில் அறிவியல் முறைப்படியிலான தூய்மைப் பணி ஏறத்தாழ ஒன்றரை ஆண்டாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், கேரளாந்தகன் வாயில், ராஜராஜன் வாயில், கருவறை விமானம் உள்ளிட்ட கோபுரங்களில் தூய்மைப் பணி முடிவடைந்துவிட்டது. தற்போது அம்பாள், சுப்பிரமணியா் சன்னதிகளில் மட்டுமே கோபுரங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பணியும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. மேலும், திருச்சுற்று மதில்கள் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், பெருவுடையாா் சன்னதி கருவறையில் தரை, அபிஷேகம் செய்வதற்காக அா்ச்சகா்கள் நிற்குமிடம் உள்ளிட்டவை சீரமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல, பெரியநாயகி சன்னதி உள்ளிட்ட சன்னதிகளிலும் புனரமைப்புப் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.

இக்கோயிலில் திருப்பணிகள் ஏறத்தாழ 75 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகளும் பொங்கலுக்குள் முடிக்க இந்திய தொல்லியல் துறையினா் இலக்கு நிா்ணயித்துள்ளனா். எனவே, பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதன் பின்னா், அறநிலையத் துறை சாா்பில் கலசம் பொருத்துதல், யாகசாலை அமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள் தொடங்கப்படவுள்ளன. இதனிடையே, விமான கருவறை, கேரளாந்தகன் வாயில், ராஜராஜன் வாயில் ஆகிய கோபுரங்களில் குடமுழுக்கு விழாவுக்கான கடம் கொண்டு செல்வதற்கான தற்காலிகப் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com