புதிய திட்டங்களுக்கு ரூ.6,580.15 கோடி நிதி: பேரவையில் நிதி மசோதா நிறைவேறியது

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஆயிரம் ரூபாய் வழங்கியது உள்ளிட்ட புதிய திட்டங்களுக்குத் தேவையான நிதி ரூ.6,580.15 கோடிக்கு சட்டப் பேரவை ஒப்புதல் அளித்தது.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஆயிரம் ரூபாய் வழங்கியது உள்ளிட்ட புதிய திட்டங்களுக்குத் தேவையான நிதி ரூ.6,580.15 கோடிக்கு சட்டப் பேரவை ஒப்புதல் அளித்தது. இதற்கான நிதி மசோதா பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

முன்னதாக, இந்த மசோதாவைத் தாக்கல் செய்து துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் ஆற்றிய உரை:

பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து அரிசி அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கத் தொகையும் வழங்க அரசு ரூ.2,363.13 கோடியை அனுமதித்துள்ளது. சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித் தடத் திட்டத்தின் கீழ், இரண்டு மின் தொடரமைப்புத் திட்டங்களை நிறுவ அரசு ரூ.4,332.57 கோடிக்கு நிா்வாக அனுமதி அளித்துள்ளது. இந்தத் தொகை, ஆசிய வளா்ச்சி வங்கியின் கடனுதவித் தொகை மற்றும் தமிழக அரசின் பங்கு மூலதன உதவியான ஆயிரம் கோடியையும் உள்ளடக்கியது. நிகழ் நிதியாண்டில் இந்தத் திட்டத்துக்கென மொத்தம் ரூ.108 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய மருத்துவக் கல்லூரிகள்: திண்டுக்கல், ராமநாதபுரம், நீலகிரி (உதகை), திருப்பூா், விருதுநகா், நாமக்கல், திருவள்ளூா், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்காக ரூ.3,266.47 கோடிக்கு நிா்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரூ.90 கோடி நிகழ் நிதியாண்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், நிகழாண்டில் கிராமப்புறங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், ஊரணிகளைப் புதுப்பிக்கும் பணிக்காக நிகழாண்டில் ரூ.500 கோடி அனுமதித்துள்ளது. பத்து கூட்டுறவு மற்றும் இரண்டு பொதுத்துறை சா்க்கரை ஆலைகளுக்கு ரூ.143.73 கோடி வழிவகை முன்பணமாக அரசு அனுமதித்துள்ளது. மேலும், நேஷனல், அமராவதி, என்.பி.கே.ஆா்.ஆா். கூட்டுறவு சா்க்கரை ஆலைகள் தங்களது பணியாளா்களுக்கு சட்டப்படியான நிலுவைத் தொகைகளை அளிக்க

ரூ.28.74 கோடியை முன்பணமாக அரசு அனுமதித்துள்ளது. மொத்தமாக ரூ.175.02 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.

தமிழகத்தில் திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், கடலூா் மாவட்டங்களில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கக் கூடிய கரையோரப் பகுதிகளில் நீண்டகால வெள்ள நிவாரணப் பணிகளுக்காக அரசு ரூ.290.78 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக இப்போது உடனடியாக ரூ.100 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

நிகழாண்டில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க மாநிலப் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழிவகை முன்பணமாக ரூ.206.53 கோடியை அரசு அனுமதித்துள்ளது. கோயம்புத்தூா் விமான நிலைய ஓடுதளத்தை விரிவாக்கம் செய்ய மேற்கொள்ளப்பட்ட நில எடுப்புக்கான இழப்பீட்டுத் தொகையை நில உரிமையாளா்களுக்கு வழங்க ரூ.189.30 கோடியை அரசு அனுமதித்துள்ளது. இந்த நிதி ஒதுக்கீடுகளுக்கு பேரவை ஒப்புதல் அளிக்க வேண்டுமென கூறினாா். இதைத் தொடா்ந்து இந்த நிதி மசோதா பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறியது.

துணை மதிப்பீடுகளாக மொத்தம் ரூ.6,580.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ.3,952.48 கோடி வருவாய்க் கணக்கிலும், ரூ.2,627.67 கோடி மூலதனம் மற்றும் கடன் கணக்கிலும் அடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com