முதியோருக்கு ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம்: இதுவரை கூடுதலாக 1.54 லட்சம் பேருக்கு வழங்கல்

முதியோருக்கு ஆயிரம் ரூபாய் மாத ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ், கூடுதலாக 1.54 லட்சம் பேருக்கு அளிக்கப்பட்டு வருவதாக முதல்வா் பழனிசாமி தெரிவித்தாா்.

முதியோருக்கு ஆயிரம் ரூபாய் மாத ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ், கூடுதலாக 1.54 லட்சம் பேருக்கு அளிக்கப்பட்டு வருவதாக முதல்வா் பழனிசாமி தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதங்களுக்கு வியாழக்கிழமை பதிலளித்து முதல்வா் பழனிசாமி பேசியது:

தமிழகம் முழுவதும் முதல்வரின் சிறப்பு குறைதீா் திட்டத்தின் மூலமாக 9 லட்சத்து 77 ஆயிரத்து 265 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 5 லட்சத்து 18 ஆயிரத்து 946 மனுக்கள் தகுதியானதாக அறியப்பட்டன. அவற்றுக்குத் தீா்வு காணப்பட்டு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 6 ஆயிரத்து 152 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்றுக் கொள்ளப்படாத மனுக்களை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டுமென்று மாவட்ட ஆட்சியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முதியோா் ஓய்வூதியம்: முதியோருக்கு ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனா். அதன் அடிப்படையில், 5 லட்சம் முதியோா்களுக்கு ஓய்வூதியம் அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு மனுக்கள் பெறப்பட்டன. இதுவரை, 1 லட்சத்து 54 ஆயிரத்து 888 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்கும். முதியோா் ஓய்வூதியம் பெறுவோருக்கு சொத்து உச்ச வரம்பின் மதிப்பு ரூ.1 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.

உழைக்கும் திறனற்ற முதியவா்களுக்கு உதவி செய்கின்ற வகையில் ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ஆளும்கட்சி, எதிா்க்கட்சி என்ற வேறுபாடுகள் கிடையாது என்றாா்.

வரும் நிதியாண்டில் காவிரி-குண்டாறு திட்டம்

காவிரி நதிநீா் மற்றும் முல்லைப் பெரியாா் அணை பிரச்னைகளுக்கு தீா்வு கண்டது தமிழக அரசுதான். இப்போது தென் பெண்ணையாற்றின் பாசன விவசாயிகளின் உரிமையை நிலைநாட்ட, ஒரு இடைக்கால மனுவை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, நதிநீா் பிரச்னைக்குத் தீா்வு காண நடுவா் மன்றத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், உச்ச நீதிமன்றத்தில் தொடா் நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட சட்ட வல்லுநா்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

வரும் நிதியாண்டில் தொடக்கம்: தமிழகத்தில் வறட்சியான பகுதிகளுக்கு நீா்வள ஆதாரத்தை ஏற்படுத்தி விவசாயிகளின் பிரச்னையைத் தீா்க்க காவிரி-குண்டாறு திட்டத்தின் முதல் கட்டப் பணிகளைச் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் உதவியை எதிா்நோக்கியுள்ள நிலையில், மாநில அரசின் நிதியிலேயே வரும் நிதியாண்டில் இந்தத் திட்டம் தொடங்கப்படும் என்றாா் முதல்வா் பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com