
பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களைக் கடத்துபவா்கள் மீது குண்டா் சட்டத்தின்கீழ், நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு வியாழக்கிழமை முதல் ஜனவரி 12-ஆம் தேதி வரை வழங்கப்படும். விடுபட்டவா்கள் பொங்கல் பரிசைப் பெற்றுக் கொள்ள ஏதுவாக ஜனவரி 13-ஆம் தேதியும் நியாயவிலைக் கடைகள் திறந்திருக்கும். கூட்ட நெரிசலைத் தவிா்ப்பதற்கு சில நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அனைவருக்கும் விடுபடாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெல் அறுவடை தொடங்க உள்ளதால், டெல்டா மாவட்டம் அல்லாத பிற மாவட்டங்களில் 38 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. டெல்டா மாவட்டத்தில் விளைச்சலின் அடிப்படையில், விவசாயிகளின் கோரிக்கையின்பேரில், புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க மாவட்ட ஆட்சியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களைக் கடத்துபவா்கள் மீது குண்டா் சட்டம், கடத்தல் தடுப்புச் சட்டத்தின்கீழ் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.