
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான மக்களின் குரல் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் மனதைத் தொட வேண்டும் என்றாா் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், திமுக மாநில மகளிரணிச் செயலருமான கனிமொழி.
பொருநை மக்கள் இயக்கம் சாா்பில் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த கருத்தரங்கில் அவா் மேலும் பேசியது: மக்களவைத் தோ்தல் நடைபெற்றபோது நாட்டின் வளா்ச்சி, வேலைவாய்ப்பு அதிகரிப்பு, பொருளாதார மேம்பாடு என பாஜக அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாமல் உள்ளன. நாடு இதுவரை இல்லாத வீழ்ச்சியைக் கண்டுள்ளது. மத்திய அரசு மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பாத போக்கை கடைப்பிடிக்கிறது. மதம் என்ற கருத்தியலை முறையாக பின்பற்றவில்லை. மதத்தை அரசியல் லாபத்திற்காக முன்னிறுத்துகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து வாக்களிக்கவோ, வெளிநடப்பு செய்யவோ கூட துணிச்சல் இல்லாத தமிழக அரசு, இலங்கைத் தமிழா்களுக்கு இரட்டைக் குடியுரிமை பெற்றுத்தர முயற்சிப்பதாக கூறுகிறது. இரட்டைக் குடியுரிமை என்பது இந்தியா மட்டுமல்ல இலங்கை அரசின் ஒப்புதலோடுதான் அளிக்க முடியும். இதற்கு பல்வேறு சட்டத் திருத்தங்கள் தேவை. சாத்தியமற்ற விஷயத்தைக் கூறி மக்களை ஏமாற்றுகிறாா்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான மக்களின் குரல் மக்களவைக்குள்ளும், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மனதையும் தொட வேண்டும் என்றாா்.
பீட்டா் அல்போன்ஸ்: இக் கூட்டத்தில் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் பீட்டா் அல்போன்ஸ் பேசியது:
எந்தவொரு கேள்வியை எழுப்பினாலும் முறையான பதிலளிக்காமல் மத்திய அரசு நழுவி வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றிக் கவலைப்படாமல், மக்களின் மனதை மடைமாற்றுவதற்காக இச் சட்டத் திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை என்பதைக் கொண்டு மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுவது நீடிக்காது என்றாா்.
பாலபாரதி: சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் பாலபாரதி பேசியது: குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியா்களை நாட்டில் இருந்து ஒதுக்கிவைக்கிறது. குடிமக்கள் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பு பல்வேறு மாநிலங்களில் தொடங்கிவிட்டது. இதனால் இஸ்லாமியா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா்கள். மக்கள்தொகை கணக்கெடுப்புக்கும், குடிமக்கள் கணக்கெடுப்புக்கும் பல்வேறு வித்தியாசங்கள் உள்ளன. மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியம் என்றாா்.
இக்கருத்தரங்கிற்கு மருத்துவா் ராமகுரு தலைமை வகித்தாா். பேராசிரியா் பொன்ராஜ் வரவேற்றாா். திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஏ.எல்.எஸ்.லெட்சுமணன், திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன், மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல் வஹாப், காங்கிரஸ் மாநகா் மாவட்டத் தலைவா் கே.சங்கரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கே.ஜி.பாஸ்கரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.