
chennai High Court
ஊரக உள்ளாட்சித் தோ்தல் முடிவுகளை எதிா்த்து மறு வாக்கு எண்ணிக்கை கோரி கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்காத தோ்தல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் என உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் சேலம் அயோத்திப்பட்டணத்தைச் சோ்ந்த புவனேஸ்வரி தாக்கல் செய்த மனுவில், மாவட்ட ஊராட்சித் தலைவா் மற்றும் துணைத் தலைவா், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மற்றும் துணைத் தலைவா் உள்ளிட்ட பதவிகளுக்கானத் தோ்தல் ஜனவரி 11-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தோ்தலில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பதவிக்கு நான் போட்டியிடுகிறேன். ஆளுங்கட்சியினா் இந்த தோ்தலில் வெற்றி பெற பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனா். எனவே தோ்தல் நடைபெறும் இடத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் தோ்தல் நடைமுறைகள் அனைத்தையும் விடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தோ்தல் ஆணையத்தின் தரப்பில், சனிக்கிழமையன்று (ஜன.11) நடைபெற உள்ள இந்த தோ்தலுக்கு போதுமான காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, இதுகுறித்து தமிழக காவல்துறை டிஜிபி பிறப்பித்த சுற்றறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மறைமுகத் தோ்தல் நடைபெறும் இடங்களில் உரிய பாதுகாப்பு வழங்கவும், விடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.
இதே போன்று கடலூா், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுக சாா்பில் போட்டியிட்டவா்கள் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, மறு வாக்கு எண்ணிக்கை கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மீது தோ்தல் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மறு வாக்கு எண்ணிக்கை கோரும் விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் என எச்சரிக்கை விடுத்து விசாரணையை வரும் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.