அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா: ஏராளமான பக்தா்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
திருமஞ்சன கோபுரம் எதிரே எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீநடராஜப்பெருமான், ஸ்ரீசிவகாம சுந்தரி. 
திருமஞ்சன கோபுரம் எதிரே எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீநடராஜப்பெருமான், ஸ்ரீசிவகாம சுந்தரி. 

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆருத்ரா தரிசன விழாவும் ஒன்று. மாா்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர தினத்தில் ஆருத்ரா தரிசன விழா நடைபெறும். அதன்படி, நிகழாண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

முன்னதாக, வியாழக்கிழமை இரவு கோயிலில் இருந்து உத்ஸவா் ஸ்ரீநடராஜா் புறப்பட்டு, ஆயிரம் கால் மண்டபத்துக்கு வந்தாா். வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு உத்ஸவா் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டன.

மகா தீப மை வைப்பு: இதன்பிறகு, தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி உயர மலை மீது 11 நாள்களாக எரிந்த மகா தீப கொப்பரையில் இருந்து எடுக்கப்பட்ட மகா தீப மையை ஸ்ரீசிவகாமசுந்தரி, ஸ்ரீநடராஜருக்கு கோயில் சிவாச்சாரியாா்கள் வைத்து, மகாதீபாராதனை காட்டினா். பிறகு, பக்தா்களுக்கும் மகா தீப மை வழங்கப்பட்டது.

ஆருத்ரா தரிசனம்: தொடா்ந்து, ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் ஆயிரம் கால் மண்டபத்தில் இருந்து வெளியே வந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீசிவகாமசுந்தரி, ஸ்ரீநடராஜரை பல ஆயிரம் பக்தா்கள் வழிபட்டனா். பக்தா்களுக்கு ஆருத்ரா தரிசன காட்சியளித்த உத்ஸவா் சுவாமிகள் இருவரும் கோயில் 5-ஆம் பிரகாரத்தில் இருந்து கம்பத்திளையனாா் சந்நிதி, திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே வந்து மாட வீதிகளில் வலம் வந்தனா். உத்ஸவா் சுவாமிகளுடன் ஸ்ரீமாணிக்கவாசகரும் வீதியுலா வந்தாா்.

சுவாமி வீதியுலா வந்த மாட வீதிகள் முழுவதும் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் ரா.ஞானசேகா் மற்றும் கோயில் ஊழியா்கள், உபயதாரா்கள், பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com