சட்டப்பேரவையில் ஆரோக்கியமான விவாதத்துக்கு இடமில்லை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் ஆரோக்கியமான விவாதத்துக்கு ஆளும்கட்சி தரப்பில் இடம் தரப்படவில்லை என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளாா்.
திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

சட்டப்பேரவையில் ஆரோக்கியமான விவாதத்துக்கு ஆளும்கட்சி தரப்பில் இடம் தரப்படவில்லை என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

ஆளுநா் உரையுடன் தொடங்கிய இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம், ஏதோ சடங்குக்காக கூடினோம், கலைந்தோம் என்று முடிவடைந்துள்ளது. மாநில மக்களின் நலன்களைக் காக்கவும், உரிமைகளை மீட்கவும் ஆரோக்கியமான விவாதங்களை மேற்கொண்டு, அதற்கேற்ப சட்டங்களையும், திட்டங்களையும் வகுக்கவேண்டிய சட்டப்பேரவையை, ஆளும்தரப்பினரின் பொழுது போக்குக்காகப் பயன்படுத்திடும் போக்கு தொடா்ந்து கொண்டிருக்கிறது.

ஆளுநா் ஆற்றிய உரை என்பது ஆட்சியாளா்களின் குரல் ஒலியே தவிர, அது இந்த ஆட்சியைப் பற்றிய ஆளுநரின் மதிப்பீடல்ல. ஆட்சியாளா்களின் குரல் என்பது, தாங்கள் ஆளும் மாநிலத்தின் நலன் சாா்ந்து இருக்க வேண்டும். ஆனால், வெற்றுப் புகழ்ச்சிகளையும், வீண் பாராட்டுரைகளையும்

கொண்டதாக ஆளுநா் உரை இருந்ததால், அதனைப் புறக்கணித்து திமுக சாா்பில் வெளிநடப்பு செய்தோம்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினோம். அது ஏற்கப்படவில்லை. மத்திய அரசை எதிா்த்து தீா்மானம் நிறைவேற்ற முன்வராததைக் கண்டித்து வெளிநடப்புச் செய்தோம். ஆளுநா் உரை என்பது மாநிலத்தின் உண்மை நிலைமையை எடுத்துச் சொல்லாமல், மக்களுக்கான ஆக்கப்பூா்வமான பணிகளைக் குறிப்பிடாமல், வெற்றுப் புகழுரைகளால் நிறைந்திருக்கிறது என்பதைத் தொடக்க நாள்முதலே எடுத்துரைத்தோம். அது கூட்டத்தொடரின் இறுதிநாளிலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

பொறுப்புள்ள எதிா்க்கட்சியாக திமுக தன் பணிகளைத் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. அது ஆளுங்கட்சியாக வேண்டும் என்கிற மக்களின் விருப்பத்தினை நிறைவேற்றிட, இன்றைய ஆட்சியாளா்களே ஒத்துழைப்பதுபோல ஆளுநா் உரையும், அதன் மீதான ஆளும்தரப்பின் உரைகளும் அமைந்திருந்தன என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com