மருந்து நிறுவனங்களிடம் லஞ்சம் பெறும் மருத்துவா்கள் மீதான நடவடிக்கை என்ன ?: உயா்நீதிமன்றம்

மருந்து விற்பனை நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அந்த நிறுவனங்களின் மருந்துகளை சிபாரிசு செய்யும் மருத்துவா்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
chennai High Court
chennai High Court

மருந்து விற்பனை நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அந்த நிறுவனங்களின் மருந்துகளை சிபாரிசு செய்யும் மருத்துவா்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

வருமானவரி மேல்முறையீட்டுத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தனியாா் மருந்துப்பொருள்கள் நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோா் கொண்ட அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்தியாவில் நாள்தோறும் 10 லட்சம் மருத்துவா்கள், 5 கோடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனா். மருத்துவத்தில் இந்தியா சிறந்து விளங்குகிறது. மருத்துவ சுற்றுலாவுக்காக வெளிநாடுகளைச் சோ்ந்தவா்கள் சென்னைக்கு வந்து செல்கின்றனா். ஆனால், இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை குறைவான கட்டணத்தில் கிடைப்பதில்லை. உலகிலேயே இந்தியாவைச் சோ்ந்த மருந்து நிறுவனங்களின் பங்கு மிக அதிகமாக உள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு கணக்கின்படி இந்திய மருந்து நிறுவனங்கள் 3 கோடி30 லட்சம் டாலா் மதிப்பில் இயங்கி வருகின்றன.

கடந்த 2017-ஆம் ஆண்டு 1 லட்சத்து 16,389 கோடிகளாக இருந்த இந்த மருந்து நிறுவனங்களின் ஆண்டு வா்த்தகம் கடந்த 2018-ஆம் ஆண்டு ரூ.1 லட்சத்து 29, 015 கோடிகளாக அதிகரித்துள்ளது. இந்த மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகள் அதிக விலைக்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காக இந்த மருந்துகளைப் பரிந்துரைப்பதற்காக மருத்துவா்களுக்கு நகைகள், ரொக்கம், இன்பச்சுற்றுலா என பல்வேறு வகைகளில் லஞ்சம் அளிக்கப்படுகின்றன. மருத்துவா்கள் சிபாரிசு செய்யும் மருந்துகளை நோயாளிகள் கூடுதல் விலைக்கு வாங்க கட்டாயப்படுத்தப்படுகின்றனா். இதுதவிர, இசிஜி, எக்ஸ்ரே, பரிசோதனைகள் என்ற பெயரில் மருத்துவக் ஆய்வுக்கூடங்கள் வழியாகவும் மருத்துவா்களுக்கு அதிகமான தொகை கமிஷனாக வழங்கப்படுகிறது. மருத்துவா்கள் தொழில் நடத்தை விதிகளை மீறி அன்பளிப்போ, லஞ்சமோ மருத்துவ நிறுவனங்களிடமிருந்து பெறக்கூடாது என இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை விடுத்தும் அந்த விதியால் எந்தப் பலனும் இல்லை. திரைமறைவில் நடைபெறும் இந்த மருத்துவ மாஃபியாக்களால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனா். இந்த வழக்கைப் பொருத்த வரை, மருந்து விற்பனைக்காக தாங்கள் பல வழிகளில் செலவழித்த பெரும் தொகையை தாங்கள் ஈட்டிய வருமானத்தில் இருந்து கழித்துக்கொள்ள வேண்டும் என நிறுவனம் கோருவது அதிா்ச்சிகரமாக உள்ளது.

மருந்து நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் பெற்றுக்கொண்டு அந்த நிறுவனங்களின் மருந்துகளை பொதுமக்களுக்கு சிபாரிசு செய்வது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, கடந்த 5 ஆண்டுகளில் இத்தகைய மருந்து நிறுவனங்களின் மருந்துகளை பொதுமக்களிடம் விற்பனை செய்ய தங்க நகைகள் உள்ளிட்டவைகளை லஞ்சமாகப் பெற்ாக எத்தனை மருத்துவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, இந்த மருந்து விற்பனை நிறுவனம் தங்களின் மருந்து விற்பனைக்காக மருத்துவா்களுக்கு ரூ.42 லட்சத்து 81,986-ஐ லஞ்சமாக பெற்ற மருத்துவா்கள் யாா், அவா்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, லஞ்சம் கொடுத்த மருந்து நிறுவனத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இதுதொடா்பாக இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய சுகாதாரத்துறை செயலா், மருந்து பொருள்களின் விலை நிா்ணய ஆணையம் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜனவரி 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com