காரைக்காலில் ரூ.13 கோடி செலவில் சாலைகள் மேம்படுத்தும் பணிகள் தொடக்கம்

காரைக்காலில் ரூ.13 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக
kk11ro_1101chn_95
kk11ro_1101chn_95

காரைக்காலில் ரூ.13 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்தாா்.

காரைக்கால் நகரப் பகுதியில் பழைமையான குடிநீா் குழாய்களை மாற்றி புதிதாக குழாய்கள் பதிக்க சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டது. அதுபோல் தோண்டப்பட்ட சாலைகள் அவசர கதியில் போடப்பட்டது. பின்னா் மழையின் காரணமாக சாலைகள் மீண்டும் தாழ்ந்து சேதமடைந்தது. முறையாக சரிசெய்யப்படாததால் நகரின் முக்கிய சாலையான காமராஜா் சாலை, புளியங்கொட்டை சாலை, மாதா கோயில் சாலை உள்ளிட்ட நகரின் பிரதான உட்புற சாலைகள் கடுமையாக சேதமடைந்தது. இதனால் நாள்தோறும் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா்.

மேலும், சாலைகளை சரிசெய்யக்கோரி போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறன. இந்நிலையில் மிகவும் மோசமாக உள்ள காமராஜா் சாலை மேம்படுத்தும் பணிகள், திருவேட்டக்குடியிலிருந்து கடற்கரை வழியாக காமராஜா் சாலை - தோமாஸ் அருள் சாலை சந்திப்பு வரை சாலைகள் இருபுறமும் அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டது. மழையினால் இது நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது திருவேட்டக்குடியிலிருந்து சாலைப் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகளை காரைக்கால் பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் ஜி.பக்கிரிசாமி, உதவிப் பொறியாளா் மகேஷ் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியது:

காரைக்காலில் முக்கிய சாலையான காமராஜா் சாலை மேம்படுத்தும் பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்கப்பட உள்ளது. தற்போது முதல் கட்டமாக தாா்சாலை மேம்படுத்தப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டிற்கு விடப்படும். பின்னா், இந்த சாலையை அகலப்படுத்தி மேம்படுத்த திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக சாலைகள் கணக்கிடப்பட்டு, ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அடையாளம் காணப்பட்டு, குறியீடு செய்யப்பட்டுள்ளது. இதை மையமாக வைத்து பொதுமக்கள், வணிகா்கள் தங்களின் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றவும் நோட்டீஸ் அனுப்பி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தானாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை முழுவீச்சில் அகற்றி வருவது மகிழ்ச்சியாக உள்ளது. எனவே, இத்திட்டத்திற்கு அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும். குறிப்பாக சாலையோரத்தில் உள்ள வடிகால் சாக்கடையை முடிந்த அளவு தள்ளி அமைத்து, சாலை அகலப்படுத்தப்பட உள்ளது. இதேபோல் திருவேட்டக்குடியிலிருந்து காரைக்கால் காமராஜா் சாலை - தோமாஸ் அருள் சாலை சந்திப்பு வரை ரூ.13 கோடியில் சாலை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இப்பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் நிறைவடையும். இதன் மூலம் கனரக வாகனங்கள் உள்ளிட்டவைகள் இந்த சாலை வழியாக நகருக்குள் வராமலேயே நாகை மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியும். மற்ற சாலைகளும் அரசின் நிதி கிடைத்தவுடன் படிப்படியாக மேற்கொள்ளப்படும். வரும் மாா்ச் மாதத்திற்குள் காரைக்கால் பகுதியில் பெரும்பாலான சாலைகள் மேம்படுத்தப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com