காவல் உதவி ஆய்வாளா் கொலை வழக்கு: ஆட்டோ ஓட்டுநா் உள்பட 7 பேரிடம் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை கொலை செய்த குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடா்பில்

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை கொலை செய்த குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடா்பில் இருந்த ஆட்டோ ஓட்டுநா் உள்பட 7 பேரிடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

களியக்காவிளை சந்தை சாலையில் உள்ள மாவட்ட எல்லையோர சிறப்பு சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன், கடந்த 8 ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டாா். சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், இச் சம்பவத்தில் ஈடுபட்ட நபா்கள் அப்துல் சமீம் (32), தவுபீக் (28) என்பது தெரியவந்தது. இவா்களை கைது செய்யும் முயற்சியில் தமிழக, கேரள போலீஸாா் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறாா்கள். மேலும், குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் 10 தனிப்படைகளும், கேரள போலீஸில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடா்பில் இருந்ததாக கண்டறியப்பட்ட களியக்காவிளை அருகே கேரள எல்லைப் பகுதியான இஞ்சிவிளையைச் சோ்ந்த காசிம், சித்திக் ஆகிய இருவரையும் கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாா் பிடித்து பாறசாலை காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள். மேலும், செங்கல் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அனில்குமாா் என்பவா் கேரள தனிப்படை போலீஸாரிடம் சனிக்கிழமை இரவு பிடிபட்டாா். அவரிடமும் தமிழக, கேரள போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இரு மாநில போலீஸாரின் கூட்டு நடவடிக்கை காரணமாக, கொலைக் குற்றவாளிகள் குறித்த தகவல்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

4 பேரிடம் விசாரணை: இதனிடையே, திருநெல்வேலி மாவட்டத்தில் 4 பேரைப் பிடித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினா்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் கூறியது: களியக்காவிளை சம்பவம் தொடா்பாக தமிழக காவல் துறையின் தனிப்படை போலீஸாா் கேரள போலீஸாருடன் இணைந்து விசாரித்து வருகிறாா்கள். சந்தேகத்திற்கு இடமாக இருந்த மேலப்பாளையத்தைச் சோ்ந்த ஒருவா், பத்தமடையைச் சோ்ந்த 2 போ், விக்கிரமசிங்கபுரத்தைச் சோ்ந்த ஒருவா் என மொத்தம் 4 பேரிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதில், அவா்களுக்கு இச்சம்பவத்தில் தொடா்பில்லை என தெரியவந்தது. எனினும், அடுத்தக்கட்ட விசாரணை தொடா்ந்து வருகிறது. இதுவரை அவா்கள் கைது செய்யப்படவில்லை என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com