Enable Javscript for better performance
அரசின் கவனத்தை ஈர்க்க காத்திருக்கும் ஆசிரியர்களின் கருணை மனு!- Dinamani

சுடச்சுட

  

  அரசின் கவனத்தை ஈர்க்க காத்திருக்கும் ஆசிரியர்களின் கருணை மனு!

  By DIN  |   Published on : 13th January 2020 02:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tec

  திருச்சி: பற்றாக்குறை ஊதியத்துடன் 10 ஆண்டுகளாக பரிதவித்து வரும் பகுதிநேர ஆசிரியர்களின் கருணை மனுக்கள் மீது தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்ப்பில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர்.

   தமிழக அரசு பள்ளிகளில் 6, 7, 8-ஆம் வகுப்புகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி உள்ளிட்டவற்றை கற்றுத்தருவதற்காக 2011-12-ஆம் கல்வியாண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் 16,549 சிறப்பாசிரியர்கள் பகுதி நேரமாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.5ஆயிரம் முதலில் வழங்கப்பட்டது. பின்னர், 2014-இல் மீண்டும் ஜெயலலிதாவே 40 சதவீதம் ஊதிய உயர்வு அறிவித்தார். இதையடுத்து தொகுப்பூதியம் ரூ.7 ஆயிரமாக உயர்ந்தது. பின்னர், 2017-இல் ரூ.7,700 ஆக உயர்த்தப்பட்டது.
   இந்த ஊதிய உயர்வுக்குப் பிறகு எந்தவித பணப் பலன்களும் இல்லாமல் சொற்ப ஊதியத்திலேயே பணிபுரிந்து வருகின்றனர். பணியின் பெயர்தான் பகுதிநேர ஆசிரியர் என்றாலும், அவரவருக்கான பள்ளிகளில் வேலைநாள் முழுவதும் பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது என்கின்றனர்.

   பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களை கணினியில் பதிவேற்றுதல், வருகைப் பதிவு பதிவேற்றம், உதவித் தொகை பணிகள் மற்றும் அரசின் திட்டங்களை மாணவர்களுக்கு பெறுவதற்கான அனைத்து கணினி வழித் தொடர்பு பணிகளையும் பகுதிநேர ஆசிரியர்களே மேற்கொண்டு வருகின்றனர்.

   பள்ளிக் கல்வித்துறையைத் தவிர்த்து இதர அனைத்து துறைகளிலும் தினக்கூலி, தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிவோருக்கு ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் சாத்தியமாகிறது. ஆனால், மாணவர்களின் கல்வி அறிவை பெருக்கும் அறப்பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு அரசு கருணை காட்டுவதில்லை என்கின்றனர் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள். மேலும், ஆண்டுதோறும் மே மாதம் ஊதியம் இல்லாமலேயே மாணவர் சேர்க்கை பணிகளையும் மேற்கொள்கின்றனர். எனவே, தங்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்கின்றனர்.

   குவியும் கருணை மனு: பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தரப்பிலிருந்து தனித்தனியாகவும், சங்கத்தின் சார்பிலும் தமிழக ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர், பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், பள்ளிக் கல்வித்துறை ஆணையர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட இயக்குநர், ஊதிய குறைதீர்க்கும் குழுத் தலைவர், சட்டப் பேரவை மனுக்கள் குழுத் தலைவர் ஆகியோருக்கு கருணை மனுக்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன. இதுமட்டுமல்லாது, நடப்பு பேரவைக் கூட்டத் தொடரில் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து குரல் எழுப்புமாறு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்களையும் சந்தித்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவர்களது பணி அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் வருவதால், பிரதமர் மோடிக்கும் சங்கத்தின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

   இதுதொடர்பாக, தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியது:
   தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கட்டுப்படியான ஊதியம், ஈஎஸ்ஐ, பணிக்கொடை, மகப்பேறு விடுப்பு, ஆண்டுதோறும் ஊதிய உயர்வு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டுமே தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறோம். ஆசிரியர்கள் போராட்டம், ஆசிரியர் வருகையின்மை, மத்திய, மாநில அரசுகளின் கல்விசார்ந்த திட்டப் பணிகளின் மட்டுமே பகுதி நேர ஆசிரியர்களை முன்னிலைப்படுத்துகின்றனர்.

   உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் பாடங்களில் நிரந்தரப் பாடங்களுக்கு தேர்வு நடத்தினால்கூட முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை. பணியில் சேர்ந்து நிரந்தரம் இல்லாமலேயே ஆயிரக்கணக்கானோர் ஓய்வு, பணி விலகல், மறைவு என்ற வகையில் 5 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உருவாகிவிட்டன. இந்த 5 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை, இப்போதுள்ள ஆசிரியர்களுக்கு பிரித்து வழங்கினாலே ஊதிய உயர்வுக்கு தற்காலிக தீர்வாக அமையும். தமிழகத்தை தவிர்த்து பிற மாநிலங்களில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஆரம்ப ஊதியமாக உள்ளது. தமிழகத்தில் மட்டும்தான் குறைவாக உள்ளது.

   கடந்த 2017-ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய அரசு பரிசீலித்து வருகிறது என அறிவித்தார். மேலும், பணிநிரந்தம் செய்ய 3 மாதத்துக்குள் கமிட்டி அமைக்கப்படும் எனவும் உறுதியளித்தார். அனைவருக்கும் அவரவர் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள பள்ளிகளுக்கு விருப்ப மாறுதல் வழங்கப்படும் எனவும் கூறினார். இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.

   இப்போதாவது அரசு இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி 12 ஆயிரம் பேரின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
   - ஆர். முருகன்
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai