Enable Javscript for better performance
தஞ்சை பெரியகோயிலில் புதிய கொடிமரம் அமைக்கத் திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சை பெரியகோயிலில் புதிய கொடிமரம் அமைக்கத் திட்டம்

    By DIN  |   Published on : 13th January 2020 03:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tan

    தஞ்சாவூர் பெரியகோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, புதிய கொடி மரம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
     இக்கோயில் வளாகத்தில் சோழர் காலத்தில் நிறுவப்பட்ட கொடிமரம் அன்னியர் படையெடுப்புகளால் அழிந்தது. பின்னர், நாயக்க மன்னர்கள் காலத்தில், நந்தி மண்டபத்துக்கு முன்புறம் புதிய கொடி மரம் நிறுவப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
     இதைத் தொடர்ந்து, மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி 1801- ஆம் ஆண்டில் இக்கொடி மரத்துக்குப் புதிய கருங்கல் பீடத்தைக் கட்டினார். இந்தத்தகவல் பெரியகோயிலில் அவர் எழுப்பிய விநாயகர் கோயிலின் வடக்குச் சுவரிலுள்ள மராட்டிய மொழிக் கல்வெட்டில் காணப்படுகிறது.
     இதையடுத்து, 1814 -ஆம் ஆண்டில் பழுதடைந்த கொடி மரத்துக்குப் பதிலாக, புதிய கொடி மரத்தை மன்னர் இரண்டாம் சரபோஜி செய்து கொடுத்தார். இக்கொடி மரமும் பழுதடைந்துவிட்டதால் 2003, பிப். 7-இல் புதிய கொடி மரம் அமைக்கப்பட்டு, அதற்குக் குடமுழுக்கு விழாவும் நடத்தப்பட்டது. 5 அடி பீடமும், 28 அடி உயரத்தில் கொடிமரமும் என மொத்தமாக 33 அடி உயரத்தில் இந்த கொடிமரம் உள்ளது.
     இந்நிலையில், பிப். 5-ஆம் தேதி நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவையொட்டி, இக்கொடி மரத்தின் மீது இருந்த பித்தளை கவசங்களைப் புனரமைப்பு செய்வதற்காக ஜன. 2-இல் கழற்றப்பட்டது. இவற்றை மெருகூட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
     இதனிடையே, தற்போதுள்ள கொடி மரம் சேதமடைந்திருப்பது தெரிய வந்தது. எனவே, புதிய கொடி மரம் அமைப்பது என கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
     இதற்காக மயிலாடுதுறை, சென்னை, ஸ்ரீரங்கம் ஆகிய பகுதிகளில் புதிய கொடி மரம் வாங்குவதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, பழைய கொடி மரத்தை அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதிய கொடி மரம் விரைவில் அமைக்கப்படவுள்ளது என திருப்பணிக் குழுவினர் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai