டவர் இருக்கு, சிக்னல் இல்லை: பிஎஸ்என்எல் அலட்சியத்தால் பரிதவிக்கும் மலை கிராம மக்கள்

சத்தியமங்கலம் மலை கிராமத்தில் பழுதடைந்த செல்லிடபேசி கோபுரம் ஓராண்டுக்கும் மேல் சீரமைக்கப்படாததால் அவசர தேவைக்கு தொலைத்தொடர்பு வசதி இல்லாமல் பரிதவித்து வருகின்றனர்.
பிஎஸ்என்எல் நிறுவனம்
பிஎஸ்என்எல் நிறுவனம்


ஈரோடு: சத்தியமங்கலம் மலை கிராமத்தில் பழுதடைந்த செல்லிடபேசி கோபுரம் ஓராண்டுக்கும் மேல் சீரமைக்கப்படாததால் அவசர தேவைக்கு தொலைத்தொடர்பு வசதி இல்லாமல் பரிதவித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கடம்பூர் மலையின் மேல் ஏறத்தாழ 20 கி.மீ. தொலைவில் உள்ள அடர்ந்த வனப்பகுதி குன்றி.  இந்த ஊராட்சியில் மாகாளிதொட்டி, குஜம்பாளையம், நாயக்கன்தொட்டி, பெரிய குன்றி,  சின்ன குன்றி,  குன்றி உள்ளிட்ட 17 குக்கிராமங்கள் உள்ளன. சுமார் 4 கி.மீ சுற்றளவு உள்ள இந்த ஊராட்சியில் சுமார் 1,300 குடும்பங்களை சேர்ந்த 5000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு வரை தொலைத்தொடர்பு வசதியே இல்லாத குன்றி கிராமத்துக்கு, அப்போது மத்திய அமைச்சராக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முயற்சியால் பிஎஸ்என்எல் நிறுவன செல்லிடபேசி கோபுரம் அமைக்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வந்தது.  இந்த செல்லிடபேசி கோபுரம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பழுதடைந்துவிட்டது. இதன்பிறகு இங்குள்ள மக்கள் பிஎஸ்என்எல் அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும், இதுவரை செல்லிடபேசி கோபுரம் சீரமைக்கப்படவில்லை.

எ.எம்.அப்துல்காதர்
எ.எம்.அப்துல்காதர்

இதனால் இங்குள்ள மக்கள் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட வரைவழைக்க முடியாத நிலையில் பரிதவித்து வருகின்றனர். இதுகுறித்து பெரியகுன்றி கிராமத்தைச் சேர்ந்த எ.எம்.அப்துல்காதர் கூறியதாவது, குன்றி ஊராட்சியில் உள்ள 40 வயதுக்குள்பட்ட பெரும்பாலான இளைஞர்கள் மனைவி, குழந்தைகளை கிராமத்திலேயே விட்டுவிட்டு திருப்பூர் பனியன் நிறுவனங்களிலும், கரும்புவெட்டும் கூலி தொழிலுக்கும் சென்றுவிட்டனர்.

மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஊருக்கு வரும் இந்த இளைஞர்களுக்கு குடும்பத்தினரை தொடர்புகொள்ள செல்லிடபேசி தான் ஒரே வழி. ஆனால் கடந்த ஓராண்டாக செல்லிடபேசி சிக்னல் கிடைக்காததால் வேலைக்காக கணவரை, குழந்தைகளை வெளியூர் அனுப்பிய பெண்கள் பரிதவித்து வருகின்றனர்.  தவிர உடல் நலம் பாதிக்கப்பட்டவரை அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு தகவல் சொல்லக்கூட முடியாத நிலை உள்ளது.  

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மத்திய அமைச்சராக இருந்தபோது, பெரிய குன்றி கிராமத்தில் இருந்து தெற்கில் 2 கி.மீ தூரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் செல்லிடபேசி கோபுரத்தை அமைத்துக்கொடுத்தார். பொதுப்பயன்பாட்டுக்காக இருந்தாலும், வனத்துறைக்கு சொந்தமான ஒரு அடி நிலத்தை கூட எடுக்க பல ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.  அந்த முயற்சியில் வெற்றி கிடைக்காமல் போகலாம்.  மிகக்கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள நிலையிலும் செல்லிடபேசி கோபுரம் அமைக்க அவர் அனுமதி பெற்றுக்கொடுத்தார்.

மிகப்பெரிய முயற்சியில் கிடைத்த தொலைத்தொடர்பு வசதி கடந்த ஓராண்டாக முடங்கிப்போயுள்ளது. இதனால் இங்குள்ள மக்கள் படும் துயரமும் ஏராளம். குன்றி ஊராட்சியில் உள்ள 1,300 வீடுகளில் செல்லிடபேசி இல்லாத வீடுகளே இல்லை. சாலை, பேருந்து, வாகன வசதி, என சமவெளிப் பகுதியில் உள்ள எந்த வசதியும் இல்லாத மலை கிராம மக்களின் தொலைத்தொடர்பு வாய்ப்பாக செல்லிடபேசிகள் மட்டுமே உள்ளது. இதனால் மிகவிரைவாக இந்த செல்லிடபேசி கோபுரத்தை சீரமைக்க பிஎஸ்என்எல் நிர்வாகம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றார்.

எம்.மாதேஸ்
எம்.மாதேஸ்

இதுகுறித்து இந்த ஊராட்சித் தலைவர் எம்.மாதேஸ் கூறியதாவது, ஊராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு கிராம மக்களை சந்திக்க செல்லும் இடங்களில் எல்லாம் செல்லிடபேசி கோபுரத்தை சீரமைக்க வேண்டும் என்கின்றனர்.  பிஎஸ்என்எல் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளோம். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குன்றி ஊராட்சியில் இருந்து தினமும் 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவ சிகிச்சைக்காக கடம்பூர் அல்லது சத்தியமங்கலம் செல்கின்றனர். மருத்துவமனைக்கு சென்றவர் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற நேரிட்டால் இந்த தகவலை வீட்டில் உள்ளவர்களுக்கு சொல்ல முடியவில்லை.

இந்த ஊராட்சியில் பல்வேறு கிராமங்களில் கடந்த 10 ஆண்டுகளில் வனத்துறை ஊழியர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் யானைகள் தாக்கி உயிரிழந்துள்ளனர். வன விலங்குகள் அச்சம் உள்ள இந்த கிராமத்தில் தொலைத்தொடர்பு மிகவும் அவசியம்.  இந்த செல்லிடபேசி கோபுரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது என பிஎஸ்என்எல் அலுவலர்கள் கூறுகின்றனர். எதுவாக இருந்தாலும் விரைவாக செல்லிடபேசி கோபுரத்தை சீரமைத்து செல்லிடபேசிகள் செயல்பட நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com