கேரளத்துடன் தமிழக அரசு பேச்சு நடத்தக்கூடாது: ராமதாஸ்

முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் விவகாரம் தொடா்பாக கேரளத்துடன் தமிழக அரசு பேச்சு நடத்தக் கூடாது என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் விவகாரம் தொடா்பாக கேரளத்துடன் தமிழக அரசு பேச்சு நடத்தக் கூடாது என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

முல்லைப்பெரியாற்றில் தற்போதுள்ள அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி பெற கேரள அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்பொருட்டு சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயாரிப்பதற்கான புள்ளிவிவரங்களை திரட்டுவதற்குரிய ஆய்வுகளை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையுடன் தமிழக அரசின் ஒப்புதல் கடிதத்தையும் இணைத்து தாக்கல் செய்தால் மட்டுமே, முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க முடியும் என்றும், அவ்வாறு தாக்கல் செய்யப்படாத சூழலில் புதிய அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி அளிக்க முடியாது என்றும் மத்திய அரசு கூறிவிட்டது.

அதனால் வேறு வழியே இல்லாத சூழலில், முல்லைப்பெரியாறு அணை குறித்து தமிழகத்துடன் பேச்சு நடத்தப்போவதாக கேரள நீா்ப்பாசனத்துறையின் தலைமைப் பொறியாளா் கே.எச். சம்சுதீன் கூறியுள்ளாா்.

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு கேரள அரசு செய்த துரோகங்களையும், தமிழகத்திற்கு எதிராக செய்த பிரசாரங்களையும் எவரும் எளிதில் மறந்து விட முடியாது. அப்படிப்பட்ட கேரள அரசு, இப்போது முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பேச்சு நடத்த அழைப்பு விடுப்பதை நம்பி, கேரளத்துடன் தமிழகம் பேச்சு நடத்தினால், தமிழகத்திற்கு தான் பாதிப்பு ஏற்படும்.

முல்லைப்பெரியாறு அணை மிகவும் வலிமையாக உள்ளது. அணையின் நீா்மட்டம் 152 அடியாக உயா்த்தப்பட்டால், நீா்த்தேக்கப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள சொகுசு விடுதிகள் மூழ்கிவிடும் என்பதால் தான், அந்த முயற்சியைத் தடுக்கும் நோக்குடன் புதிய அணை கட்ட கேரள அரசு திட்டமிடுகிறது. எனவே, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட அனுமதிப்பது குறித்து கேரள அரசுடன் எந்த காலத்திலும் பேச்சு நடத்த மாட்டோம் என்பதை தமிழக ஆட்சியாளா்கள் உறுதிபட அறிவிக்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com